தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்க, வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 39 தொகுதிகளிலும் கடைசி 3 தொகுதிகளில் தலைநகரம் சென்னையைச் சேர்ந்த தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் உள்ளன.
மதியம் 1 மணி நிலவரப்படி வட சென்னையில், 35.09 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல தென் சென்னை தொகுதியில், 33.93 சதவீத வாக்குகளும் மத்திய சென்னை தொகுதியில் 32.31 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
3 மணிக்கு 51.41 சதவீத வாக்குகள் பதிவு
அதேபோல பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் 57.67 சதவீத வாக்குகள் பதிவாகின. எனினும் வழக்கம்போல சென்னை தொகுதிகளில் குறைவாகவே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வட சென்னையில், 44.84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல தென் சென்னை தொகுதியில், 42.10 சதவீத வாக்குகளும் மத்திய சென்னை தொகுதியில் 41.47 வாக்குகளும் பதிவாகி உள்ளன. இதன்மூலம் சென்னையின் ஒட்டுமொத்த சராசரி 42 சதவீதமாக உள்ளது.
5 மணி நிலவரம் என்ன?
மாலை 5 மணிக்கு, தென் சென்னை தொகுதியில் குறைந்தபட்சமாக 57.04 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. மத்திய சென்னை தொகுதியில் 57.25 சதவீத வாக்குகளும் வட சென்னை மக்களவைத் தொகுதியில் 59.16 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
என்ன காரணம்?
ஒவ்வொரு தேர்தலிலும் மாநகரங்களில் மிகவும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின்றன. சென்னையில் ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை. குறிப்பாக சென்னை மாநகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் ஒருமுறை கூட 70 சதவீத வாக்குகள் எட்டப்படவில்லை.
கிராமப் புறங்களில் எப்போதுமே வாக்குப் பதிவு அதிகமாக நடைபெறுகிறது. சென்னையில் பணிக்காக வசிக்கும் பல்வேறு மக்கள், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்குச் செலவு செய்து செல்கின்றனர். வெளி நாடுகளில் இருந்தெல்லாம் ஜனநாயகக் கடமையை ஆற்ற, இந்தியக் குடிமகன் தேசம் திரும்புவது உண்டு.
இந்த நிலையில், தலைநகரம் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் எப்போதுமே குறைவாக உள்ளது. இதற்கு சென்னையில் இருக்கும் மேல்தட்டு மக்களின் மனநிலை முக்கியக் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ‘’நான் வாக்களித்து என்ன மாறிவிடப் போகிறது? எனது ஒரு வாக்கால் என்ன பயன்? நான் வாக்களிப்பதால் நாட்டில் கொள்ளையும் ஊழலும் நின்றுவிடப் போகிறதா?’’ என்று யோசிப்பவர்கள், வாக்களிக்கச் செல்வதில்லை.
அதேபோல, விடுமுறை நாளில் வீட்டில் இருக்கலாம், எதற்கு வெயிலில் அலைய வேண்டும் என்று நினைப்பவர்களும் வாக்களிக்கச் செல்வதில்லை.
ஊருக்குச் செல்வதும் ஒரு காரணம்
மேலும் சென்னையில் ஓட்டு இருக்கும் சிலர், கிடைக்கும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஊருக்குச் சென்றுவிடுவதாலும் வாக்குப் பதிவு சதவீதம் சென்னையில் குறைவதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, வாக்களிப்பது நமது கடமை, உரிமை என்பதை மனதில் இருத்தி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.