சென்னை மாநகராட்சி தேர்தலில் பிரபல பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், சென்னை திரு.வி.க.நகர் 72ஆவது வார்டில் போட்டியிட்ட பாடகர் கானா பாலா தோல்வி அடைந்தார். அங்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில் கானா பாலா 6,095 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். கானா பாலா வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்