சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்கள் ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


முதல்வர் பேச்சு:


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "சேர்வராயன் மலை, பச்சைமலை, நகரமலை என இயற்கை எழில்கொஞ்சும் சேலத்திற்கு வந்துள்ளேன். சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாடுதான் நினைவுக்கு வருகிறது. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தந்தாக வேண்டும். டி.எம்.செல்வகணபதிக்கு அறிமுகம் தேவையில்லை. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உருவான போர்வாள் தான் செல்வகணபதி. சேலத்தில் அவர் குரல் ஒலிப்பது போல நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மலையரசன் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களில் ஒருவர். உங்களின் முகங்களை பார்க்கும்போது திமுகவின் மாபெரும் வெற்றி கண்ணுக்கு தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உண்மையான மக்களாட்சி நடக்கிறது. தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றனர். திராவிடத்தின் குரல் தெற்கில் மட்டுமல்லை வடக்கிலும் ஒலிக்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு திமுக அரசுதான் எடுத்துக்காட்டு. மத்திய அரசு எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு பாஜக அரசுதான் எடுத்துக்காட்டு என்றும் பேசினார்.



பிரதமர் மோடிக்கு பதில்:


சேலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக தூக்கத்தை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார். நாங்கள் தூக்கத்தை தொலைக்கவில்லை. சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் சாமானிய மக்கள்தான் தூக்கத்தை தொலைத்து விட்டனர். வேளாண் சட்டங்களால் விவசாயிகளும், தொழிலாளர் விரோத சட்டங்களால் தொழிலாளர்களும், சிறுபான்மையினர், பட்டியல் இன மக்கள் என 10 ஆண்டுகால பாஜக ஆட்சியால் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறது. உச்சநீதிமன்றத்தால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திர ஊழலால் பிரதமர் மோடிதான தூக்கமின்றி தவித்து வருகிறது.


தேர்தல் அறிவிப்புக்கு முன் தென்மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற முடியாத நிலை இருந்தது. ஆனால் தேர்தல் பத்திர ஊழலுக்கு பிறகு வடமாநிலங்களிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் பிரதமர் மோடி தூக்கமின்றி உள்ளார். எதிர்க்கட்சி முதலமைச்சர்களை அமலாக்கத்துறை விட்டு மிரட்டுகிறார். வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உச்சகட்ட தோல்வி பயத்தில் மத்திய அரசின் அமைப்புகளை எதிர்க்கட்சியினருக்கு எதிராக பயன்படுத்தி இந்திய ஜனநாயகத்தை சீரழித்து வருகிறார். இதனால் இந்தியா முழுவதும் மக்கள் கோபத்தில் உள்ளனர். அதனால்தான் மத்திய நிதி அமைச்சர் உள்பட பலர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டனர். 



தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட ஆட்கள் கிடைக்காமல், முன்னாள் ஆளுநர், எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் என பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். நோட்டாவிற்கு கீழே வாக்குகள் போய்விடக்கூடாது என்பதே பாஜகவின் தற்போதைய பயமாக உள்ளன. திடீரென எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பற்றி பேசுகிறார். ஜெயல்லிதா இருக்கும்போது இந்தியாவிலேயே அதிக ஊழல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று கூறிய மோடி, தமிழக மீனவர் தாக்கப்படுவதற்கு ஜெயலலிதா காரணம் என்றும் கூறினார். பாஜக ஆட்சியின் பெண்கள் நிலை பாதுகாப்பாக இல்லை. நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டு விட்டது. 


மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை, பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை உயிரோடு கொளுத்தியது பாஜக ஆட்சியில்தான். ஆனால் இந்த செய்திகளுக்கு பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், பெண் சக்தி குறித்து பேச பாஜகவிற்கும் பிரதமருக்கும் எந்த தகுதியும் இல்லை. அருகதை இல்லை என கடுமையாக விமர்சித்தார்.