கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 13) வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி அமோகப் பெரும்பான்மை பெற்று, ஆட்சியமைக்க உள்ளது. இதன்மூலம் பாஜக ஆட்சியில் மாநிலங்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்துள்ளது. 


ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், கர்நாடகத்திலும் ஆட்சியமைக்க உள்ளது. 


ஆட்சிக் கட்டிலில் பாஜக


காங்கிரஸ் இல்லாத இந்தியாவை அமைப்போம் எனத் தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கமிட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக. அதைப் படிப்படியாகச் செயல்படுத்தியும் வருகிறது.


கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்களில் 16 மாநிலங்களில் ஆளும் கட்சியாகப் பொறுப்பு வகிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட், மகாராஷ்டிரா  ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. 


பாஜக ஆட்சிபுரியும் 16 மாநிலங்கள்


பாஜக அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. அதே போல, அசாம், ஹரியானா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ், கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 


10 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி


பிஹார், ஒடிசா, பஞ்சாப், டெல்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா,தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத எதிர்க் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. 


காங்கிரஸ் நிலை என்ன?


சுதந்திரத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட 17 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் அதிக முறை வென்ற கட்சி. 3 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த கட்சி. 54 ஆண்டுகள் அதிகாரக் கட்டிலில் அமர்ந்திருந்த கட்சி. 6 பிரதமர்களைக் கண்ட கட்சி. அப்படிப்பட்ட கட்சி இன்று 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. 


தற்போது நாடு முழுவதும் 4 மாநிலங்களில்  காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அதாவது சத்தீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களை காங்கிரஸ் ஆள்கிறது. கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு, ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய 3 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறது.  இவை தவிர்த்து சட்டப்பேரவை உள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.