Tamil Nadu Assembly Election Vote Counting Results 2021 : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,22,372, பெண் வாக்காளர்கள் 1,27,653. மூன்றாம் பாலினத்தவர்கள் 28 என மொத்தம் 2,50,053 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சி. சண்முகம் 8510 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மோகனை தோற்கடித்தார். புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கே.கிருஷ்ணசாமி படுதோல்வி அடைந்தார்.
திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து, 1996ல் ஜனதாகட்சி வேட்பாளராக களமிறங்கிய கிருஷ்ணசாமி 1,38,670 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். 2006ல் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக களமிறங்கி 38,715 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 2021ல் தனித்து நின்று வெறும் 6544 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.
அரசியல் களம்: 1990-களில் நடுப்பகுதிகளில் ஜான் பாண்டியனின் அரசியல் ஸ்திரதத்தன்மை கேள்விக்குறியான போது, மருத்துவரான கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் தலைவராய் உருவெடுத்தார். 1995-இல் நடைபெற்ற கொடியன்குளம் வன்முறையில் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடிய கிருஷ்ணசாமி திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கினார். மாநில அரசு அமைத்த நீதி விசாரணையின் அறிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதி விசாரணையில் கலந்து கொள்ள மறுத்த ஒடுக்கப்பட்ட மக்கள் கிருஷ்ணசாமியின் செயல்பாடுகளால் விசாரணையில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைத்து இந்துக்களும் வடம் பிடிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிருஷ்ணசாமியின் அரசியல் இருத்தலை மேலும் உறுதிபடுத்தியது .
1996-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஜனதா கட்சி வேட்பளாராக களமிறங்கிய இவர், 27.3 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1998-இல் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை முழுநேர அரசியல் கட்சியாக (புதிய தமிழகம்) மாற்றினார். 1998-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் தென் மாவட்டங்களில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது. மாஞ்சோலை கலவரத்துக்கு பிறகு, பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும், சாதி வன்முறையையும் வெளிப்படையாக பேச ஆரம்பித்தது. புதிய தமிழகம் கட்சியின் அரசியல் தேவையை திமுக உணரத் தொடங்கியது. 2001 சட்டமன்றத் தேர்தலில் புதிய- தமிழகமும், மூவேந்தர் முன்னேற்றக் கழகமும் திமுகவுடன் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட புதிய தமிழகத்துக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டன. தென் மாவட்டங்களில் திமுகவின் இராண்டாம் கட்டத் தலைவர்கள் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு போராடினர். எவ்வாறாயினும் ஒட்டப்பிடாரம் தொகுதியில், 42.6% வாக்குகள் பெற்ற கிருஷ்ணசாமி வெறும் 651 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வி தான் கிருஷ்ணசாமியின் அரசியல் வாழ்கையில் மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டனியில் புதிய தமிழகம் இடம்பெறவில்லை. அந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற புதிய தமிழகம் கட்சி மிகப்பெரிய பின்னடவை சந்தித்தது. தென்காசி மக்களவைத் தொகுதியில் வெறும் 14.2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதன் அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணசாமி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூடு சேர்ந்தார். தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தேசிய அரசியலாக உருவெடுத்தது. அந்த சட்டமன்றத் தேர்தலில் மாயாவதியும் தமிழகத்தில் தீவிர அரசியல் பரப்புரை மேற்கொண்டார். எவ்வாறாயினும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் கிருஷ்ணசாமி 9,000கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். தமிகத்தில் பகுஜன் சமாஜ் அரசியல் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், கிருஷ்ணசாமியின் இந்த முடிவு தமிழக அரசியலில் இருந்து அவரை மேலும் அந்நியப்படுத்த தொடங்யது. 2006 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் வெறும் 0.8 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. அதன்பின், மீண்டும் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தொடங்கினார். 2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அவர், ஒட்டப்பிடாரம் தொகுதியில் 25,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
2016ல் திமுகவுடன் கூட்டணி அமைத்த அவர், ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெறும் 493 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தன்னிச்சையாக போட்டியிட்டார். ஒட்டப்பிராடம் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, புதிய தமிழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது.
திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து,1996ல் ஜனதாகட்சி வேட்பாளராக களமிறங்கிய கிருஷ்ணசாமி 27.3% வாக்குகளும், 2006ல் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக 28% வாக்குகளும் பெற்றார். 2021ல் தனித்து நின்று வெறும் 3.68% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.