தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்தநிலையில், செங்கல்பட்டு நகராட்சி 9-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லோகேஷ் கண்ணன் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். இந்த வார்டில் மொத்தம் 1549 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் 1031 வாக்குகள் பதிவாகியுள்ளது. 


இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அமுல்ராஜ் 657 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளர் குமரேசன் 288 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுரை 65 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 


தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அஜித் 11 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுசில் குமார் 9 வாக்குகளும், பாஜக வேட்பாளர் லோகேஷ் கண்ணன் 1 வாக்குகள் பெற்றுள்ளனர். 


முன்னதாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.



அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும், திமுக நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போது வரை திமுக  தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர், கும்பகோணம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இவை தவிர திமுக வேட்பாளர்கள் தற்போது வரை 224 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 976 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 3373 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண