Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை காட்டிலும், கூடுதலான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
என்.டி.ஏ., கூட்டணி முன்னிலை:
பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்பணியும் தொடங்கியுள்ளது. அதில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக, பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை காட்டிலும், கூடுதலான இடங்களில் அந்த கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் கடும் இழுபறி நிலவும் என கூறப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு முன்னிலை கிடைத்துள்ளது. பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. மேலும் முன்னிலைகள் அடுத்தடுத்த சுற்றுகளில் மாறக்கூடும், ஆனால் ஆரம்பகால போக்குகள் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு வலுவான உத்வேகத்தை வழங்கியுள்ளன.
9.30 மணி நிலவரம் என்ன?
வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 9.30 மணி நிலவரப்படி பாஜக மற்றும் நிதிஷ்குமார் கூட்டணி 125 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவ் கூட்டணி 70 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மூன்று இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இது ஆரம்பகட்ட நிலை என்பதால், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை மாற்றம் அடையக்கூடும்.
கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் கூட வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்டத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது. ஆனால், நேரம் செல்ல மொத்த சூழலும் மாறி, மிக எளிய வித்தியாசத்திலேயே ஆட்சியை தக்கவைத்தது. அதனால், இந்த முறையும் இறுதி கட்டத்தில் பெரிய திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.