சத்தீஸ்கர் மாநிலத்தில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டதாக சிறுமியை நம்ப வைத்து தனது நண்பரை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் 2021-2022 ஆண்டு காலத்தில் நடந்தாலும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி நல்லதுக்கு, கெட்டதுக்கும் பயன்படும் அளவுக்கு சென்று விட்டது. இதனைப் பயன்படுத்தி பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்த வேண்டிய இத்தகைய சமூக வலைத்தளங்களை மோசடிக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவது கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அப்படியான ஒரு சம்பவத்தைப் பற்றிக் காணலாம்.
சமூக வலைத்தளம் மூலம் மிரட்டல்
பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞர், சமூக வலைத்தளம் மூலமாக சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை தொடர்பு கொண்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் அந்த சிறுமிக்கு குந்தன் ராஜ் என்ற நபர் நட்பு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் அவரது எண்ணைப் பிடித்து போனில் அழைத்து பேசியுள்ளார். குந்தன் ராஜ் தான் பாட்னாவில் இருந்து பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரது சுயவிவரப் படத்தைப் பார்த்த பிறகு அவளிடம் காதல் கொண்டதாகக் கூறினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி முதலில் பயந்து போய் பேச மறுத்துள்ளார். ஆனால் குந்தன் ராஜ் தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறி ஒரு புகைப்படத்தை அந்த சிறுமிக்கு அனுப்பி, அவரை உணர்வு ரீதியாக பாதிக்கப்பட செய்தார். இதனால் மிரண்டு போன அந்த சிறுமி வேறு வழியின்றி குந்தன் ராஜை காதலிப்பதாக ஒப்புக் கொண்டார். பின்னர் இருவரும் தினசரி உரையாடிய நிலையில் நாளுக்கு நாள் இவர்கள் நெருக்கம் அதிகரித்தது.
வீடியோ காலில் திருமணம்
பின்னர் காலப்போக்கில் வீடியோ காலில் அப்பெண்ணை அழைத்து நாம் இருவரும் இப்போதே திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறி சில சம்பிரதாயங்களையும் செய்து அந்த சிறுமியை நம்ப வைத்திருக்கிறார். நாம் இருவரும் கணவன் - மனைவி என கூறியுள்ளார். ஆனால் ஒருமுறை கூட குந்தன் ராஜ் அந்த சிறுமியை நேரில் சந்திக்கவில்லை. இந்த நிலையில் வீடியோ கால் மூலமாக அடிக்கடி அந்த சிறுமியை அழைத்து பாலியல் செயல்களில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
அந்த பெண்ணும் வேறுவழியின்றி செய்ய, அதனை வீடியோவாக பதிவு செய்துக் கொண்டு மிரட்ட தொடங்கியுள்ளான். இவற்றையெல்லாம் நான் சொல்வது மாதிரி செய்யாவிட்டால் ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன் என அந்த சிறுமியை குந்தன் மிரட்டியுள்ளார். இதற்கிடையில் அனுப்பி அந்த சிறுமியுடன் முதலிரவு கொண்டாட தனது நண்பர் ஒருவரை அனுப்பியிருக்கிறார். மேலும் அதனை தான் வீடியோ காலில் லைவ் ஆக பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தலைமறைவு குற்றவாளி கைது
இதனையடுத்து 2021ல் அக்டோபர் மாதம் குந்தனின் நண்பரான சௌகான் என்பவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவர் சிறுமியின் வீட்டுக்கு தீபக் யாதவ் என்ற பெயரில் வந்து இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். தொடர்ச்சியாக குந்தன் அந்த சிறுமியை மிரட்ட அவர் ஒத்துழைக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுமியின் ஆபாச வீடியோவை அவரது சகோதரிக்கு அனுப்ப இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுமியை அழைத்துக் கொண்டு நேராக துல்துலா காவல் நிலையம் சென்ற அவரது சகோதரி குந்தன் ராஜ், சௌகான் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அவரின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குந்தன் ராஜை 2022ம் ஆண்டு கைது செய்தனர். ஆனால் சௌகான் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் நவம்பர் 12ஆம் தேதி அவர் ஜஷ்பூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இருவருக்கும் தகுந்த தண்டனை பெற்று தரப்படும் என சத்தீஸ்கர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.