விமானத்தில் கடத்திக் கொண்டு வந்த, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை, ரயில், சாலை வழியாக, பல்வேறு மாநிலங்களுக்கு, எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்தது, தெரியவந்தது
ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து பெரிய அளவில், ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக கஞ்சா, விமானம் மூலம், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், நேற்று நள்ளிரவில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வந்து தரை இறங்கும் விமானங்களில் வரும், அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, சோதனைகள் நடத்தினர்.
ஏன் சென்னை வந்தார்கள் என சந்தேகம் ?
இந்தநிலையில் நேற்று அதிகாலை, மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்த போது, வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பேர், ஒரு குழுவாக, தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளாக சென்று விட்டு, இந்த விமானத்தில், தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக, சென்னைக்கு திரும்பி வந்தனர்.
வடமாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் 3 பேரும், சுற்றுலாவை முடித்துவிட்டு, தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்லாமல், சென்னைக்கு வந்தது, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர்கள் 3 பேரையும், சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி
அப்போது அவர்கள் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களை வெளியில் அனுப்பாமல், சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உடமைகளை பரிசோதித்தனர். அவர்கள் உடமைகளுக்குள் பெருமளவு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகள், மற்றும் பார்சல்கள் இருந்தன. அவைகளை சுங்க அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகள், மற்றும் சாக்லேட்டுகள் போன்றவைகளில், ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதைப்போல் அவர்கள் வைத்திருந்த பார்சல்களிலும் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
30 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா
அவர்கள் 3 பேர்களின் உடமைகளில் இருந்து, மொத்தம் சுமார் 30 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து, சுங்க அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி. இதை அடுத்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் பயணிகள் 3 பேரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்து, மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இந்த கஞ்சாவை சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இங்கிருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, இந்த உயர் ரக கஞ்சாவை கடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே, ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக, வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கயின் போதைப் பொருள் கடத்திக் கொண்டு வந்த சம்பவத்தில், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த, திரைப்பட நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைப்போல் இப்போது ரூ.30 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் வழக்கிலும், கைது செய்யப்பட்டுள்ள 3 பேர்களில், ஓர் இருவர், முக்கியமான நபர்கள் என்றும் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூ. 30 கோடி மதிப்புடைய 30 கிலோ ஹைட்ரோபோனிக் உயிர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநில கடத்தல் பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.