Bengal PrePoll Violence: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதில்,  தங்கள் தொண்டர் ஒருவர் உயிரிழந்ததாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தி.காங்கிரஸ் - பாஜக இடையே மோதல்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. அதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தான் அம்மாநிலத்தில் உள்ள நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அக்கட்சி தொண்டர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிக்கு அருகே, நேற்று இரவு ரோந்து சென்றபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் கூர்மையான பொருட்களை கொண்டு தாக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.


இந்த தாக்குதலில் தங்கள் பெண் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து பாஜகவினர் மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






மேற்கு வங்கத்தில் கலவரம்:


ANI நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோக்களில், பல இடங்களில் பாஜகவினர் தீ வைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆங்காங்கே சாலைகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. பாஜகவினர் பல கடைகளை அடித்து நொறுக்கிய சம்பங்களும் நடைபெற்றுள்ளன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி வன்முறைக்காரர்களை அடித்து விரட்டியதோடு, தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு:


நந்திகிராமில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்குவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி மிரட்டியதாகவும், வன்முறைக்கு காரணமும் அவரே என்றும் பாஜக தலைவர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். அதன்படி, ”நந்திகிராமில் பாஜக தொண்டர்கள் மீது திரிணாமுல் ஆதரவாளர்கள் கோழைத்தனமாக தாக்கியதை நான் கண்டிக்கிறேன்.


நந்திகிராமில் உள்ள சோனாச்சுரா பகுதியில் திரிணாமுல் ஆதரவாளர்கள் பாஜக தொண்டர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கினர். சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். ரதிபாலா அர்ஹி என்ற பெண் பாஜக தொண்டர் உயிரிழந்தார்” என அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.






திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு:


இதனிடையே, நந்திகிராமில் நடபெற்ற வன்முறையில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும்,  பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் காரணமாக அவர்களது தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “வன்முறையை உருவாக்கவும், பதற்றத்தைத் தூண்டவும் பாஜகவினர் தொடர்ந்து சதியில் ஈடுபட்டுள்ளனர்” எனவும் குற்றம்சாட்டியுள்ளது.