விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தில் இருளர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை நகைக்காக மர்ம நபர்கள், கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரத்தில் மூதாட்டி கொலை 


விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் இருளர் காலனி குடியிருப்பில் சகுந்தலா என்பவர் தனியாக வசித்து வருகிறார்.  இந்நிலையில் இன்று காலை அவரது மகன் முருகன் தனது தாயை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் சகுந்தலா ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அப்பகுதியில் மக்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது சகுந்தலா முகம் மற்றும் கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

வளவனூர் போலீஸ் விசாரணை 


பின்னர் கொலை சம்பவம் தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் எஸ்பி தீபக் சிவாஜ் தலைமையில் ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

 

விசாரனையில் கொலை செய்யப்பட்ட மூதாட்டியிடம் இருந்து காதில் அணிந்திருந்த கம்மல், கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க நகைக்காக மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு கொலை செய்து சென்றது தெரியவந்துள்ளது. நகைக்காக மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.