இந்தியா முழுவதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றது. ஆட்சியில் உள்ள பாஜகவை மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வரவிடக்கூடாது என நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தல் திட்டங்களை உருவாக்கி வருகின்றது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இது I.N.D.I.A கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சியினர் நிதிஷ் குமாரின் முடிவால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறும் அளவிற்கு விமர்சித்து தள்ளினர்.
இந்நிலையில் நாடு முழுவதும் I.N.D.I.A கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்று கொண்டு உள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். I.N.D.I.A கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டி வருவதால், காங்கிரஸ் கட்சியின் நிலை கிட்டத்தட்ட, “ உங்களிடம் (கூட்டணிக் கட்சிகளுடன்) கூட்டணிக்குள் மல்லுக்கட்டுவதற்கு நான் பாஜகவுடனே மல்லுக்கட்டிக்கொள்வேன்” என புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
I.N.D.I.A கூட்டணிக்குள் மற்றொரு பின்னடைவாக, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதாகக் கூறியுள்ளது, இதன் மூலம் மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இருக்காது என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் உள்ள 13 இடங்களிலும், சண்டிகரில் 1 இடத்திலும் போட்டியிடும் என்ற அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். மேலும் இந்த அறிவிப்பின்போது, கெஜிர்வால் காங்கிரஸை சராமாரியாக விமர்சித்தார். பஞ்சாபில் மக்கள் "நல்லதை எப்போதும் மறக்கமாட்டார்கள்" என்றார்.
மேற்கு வங்கத்தில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் அறிவிப்பால் ஏற்கனவே தவித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனதா தளம் (ஐக்கிய) தலைவர் நிதிஷ்குமார், கடந்த மாதம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாறிய பின்னர் மேற்கு வங்கத்திலும் பஞ்சாப்பிலும் காங்கிரஸ் கழட்டிவிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள மற்றொரு கூட்டணிக் கட்சியான ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளது என்ற பேச்சு அடிபடுகின்றது. ஜெயந்த் சவுத்ரியின் தாத்தாவான முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கிற்கு மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததிலிருந்து இந்த பேச்சு அடிபடுகின்றது.
பஞ்சாபில் வீட்டு வாசலில் ரேஷன் விநியோகம் குறித்த பொது நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும். பஞ்சாபில் 13 இடங்களும், சண்டிகரில் ஒரு இடமும் உள்ளது. அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஆம் ஆத்மி 14 இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது) நீங்கள் செய்ததைப் போல எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் ஆம் ஆத்மி 14 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் இந்த அறிவிப்பு I.N.D.I.A கூட்டணிக்குள் சலசலப்பை மேலும் அதிகரித்துள்ளது.