இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகளையும் மாநிலத்தில் பலமாக உள்ள மாநிலக் கட்சிகளுடனும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாத அதேநேரத்தில் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. 


ஏ.சி.சண்முகம்:


தமிழ்நாட்டைப் பெறுத்தவரையில் மிகவும் கவனம் பெற்றுள்ள கூட்டணி என்றால் அது ஆளும் திமுக இடம் பெற்றுள்ள I.N.D.I.A கூட்டணி, தேசிய அளவில் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் தனிக் கூட்டணி என மும்முனைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது இல்லாமல் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்குகின்றது. 


பாஜக கூட்டணியில் இதுவரை கூட்டணிக் கட்சிகள் எதுஎது உள்ளது, யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள், எவ்வளவு தொகுதிகள் என இன்னும் முடிவாகத நிலையில். புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் பாஜக கூட்டணியில் தான் வேலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 


தாமரை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டி:


இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ” வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதி கட்சி போட்டியிடுகிறது. எனவே புதிய நீதிக் கட்சி சார்பில் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். தாமரை சின்னத்தில் போட்டியிட 15 வேட்பார்கள் போட்டியிட தேர்தல் களத்தில் உள்ளனர்.  மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.


தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் மும்முனை போட்டியாக தேர்தல் களம் இருந்தாலும் வேலூர் கோட்டையில் தாமரை மலரும். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம்” எனவும் தெரிவித்துள்ளார். 


இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த தொகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அப்போது அவர் அதிமுகவின் நேரடி வேட்பாளாராக களமிறங்கியிருந்தார். அதன் பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு புதிய நீதி கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். இதில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்த் -இடம் தோல்வியைச் சந்தித்தார்.