ABP Cvoter Exit Poll Result 2024 AP: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (ஜூன் 1) முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. நாட்டின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ABP – C Voter இணைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தின.


அதில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகள் முழுவதையும் என்டிஏ கூட்டணி கைப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.


ஆந்திராவில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த நிலவரம் பற்றிக் கூறப்பட்டு உள்ளதாவது:


ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் இந்தியா கூட்டணி எந்த இடத்தையுமே பெறாது என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் என்டிஏ கூட்டணி 21 முதல் 25 வரையிலான தொகுதிகளைப் பெறலாம் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் 0 முதல் 4 இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.


2 கட்சிகளுடன் இணைந்து களம் காணும் பாஜக


ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண்கிறது. அதேநேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி சேர்ந்து என்டிஏ கூட்டணியாகக் களம் காண்கின்றன. காங்கிரஸ் தனித்துக் களம் காண்கிறது.


இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டு கடந்த முறை 1 இடத்தைக்கூட வெல்ல முடியாத, பாஜக இம்முறை கூட்டணியில் 21 முதல் 25 தொகுதிகளை வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பலமும் ஆளுங்கட்சி எதிர்ப்பு மனநிலையும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


வாக்கு சதவீதம் என்ன?


வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெறும் 3.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய என்டிஏ கூட்டணி, 52.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 41.7 சதவீத வாக்குகளைப் பெறும் என்று ABP – C Voter கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் எதிர்க் கட்சியான , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


தெலங்கானா நிலை என்ன?


அண்டை மாநிலமான தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 7 முதல் 9 இடங்களையும் என்டிஏ கூட்டணியும் 7 முதல் 9 தொகுதிகளையும் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1 தொகுதியைப் பெறலாம் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.