1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஏற்பட்ட பிரச்சினையால் வந்தால் இனி முதல்வராகத்தான் வருவேன் என்று சபதமிட்டு, மீண்டும் 1991ஆம் ஆண்டு முதல்வராகவே சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அதே வரலாறு இன்று சந்திரபாபு நாயுடு மூலம் மீண்டும் ஆந்திராவில் திரும்பியுள்ளது.


தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று, முதல்வராக உள்ளார். ஜூன் 9ஆம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு


முன்னதாக 2019ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆனார். சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஆந்திர சட்டப் பேரவையில், தன் மனைவி குறித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸார் அவதூறாகவும் இழிவாகவும் பேசுவதாகக் கூறி சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுதார்.


இனி இந்த சட்டப்பேரவைக்குள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். கைகளைக் கட்டியவாறே சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டில், ஆந்திர மாநிலத்தில் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.


அன்று ஜெயலலிதா, இன்று சந்திரபாபு நாயுடு!


1989ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவுக்கும் எதிர்க் கட்சியான அதிமுகவுக்கும் இடையில் மோதல் வெடித்து, கைகலப்பு வரை சென்றது. பேரவையில் முதல்வராக இருந்த கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.




சட்டப்பேரவையில் இருந்து ஆவேசமாக வெளியே வந்த ஜெயலலிதா, இனி இங்கு நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என்று சபதமிட்டுச் சென்றார். அதே வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, 1991 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார். முதல் முறையாக முதல்வர் ஆகி, ஜெயலலிதா சட்டப்பேரவை சென்றார். அந்த வரலாறு இப்போது ஆந்திராவில் மீண்டும் திரும்பி உள்ளது.


சந்திரபாபு நாயுடுவின் தேவை


இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாலும் 240 தொகுதிகளை மட்டுமே பெற்று, தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு, பிஹார் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் ஆதரவுடனேயே பாஜக நாட்டில் ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயமும் உருவாகி உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.