அமமுக - பாஜக கூட்டணியிடையிலான தொகுதி பங்கீடு உறுதியானது. அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பாஜக கூட்டணி:
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அமமுக 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை கொடுத்துள்ளார்கள், எந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவிக்கும். பாஜக தொகுதிகளை அறிவித்த பின்னர், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
முதலில் பாஜக அதிக தொகுதிகளை கொடுத்தார்கள், பின்னர் பாஜக கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் குறைத்து தந்துள்ளார்கள். நான் ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன்; குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியது.
அணிலை போல மோடிக்கு உதவுவேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நான் தேனியில் போட்டியிடுவேன் என்பது கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஓபிஎஸ் அணி எங்கு போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது தேனி மக்களவை தொகுதி எம்.பி-யாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் உள்ளார். மீண்டும் அவரே தேனி தொகுதியில் எம்.பி-யாக போட்டியிடுவார் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டால், ஓ.பி.ரவீந்திரநாத் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல் பரவி வருகிறது.
இதையடுத்து, பாஜக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒப்பந்தத்தில் தமமுக நிறுவனர் ஜான் பாண்டியனும் அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.