சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரகளைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி நிலைப்பாட்டை பொறுத்தவரை மற்ற கட்சிகள் வந்தால் ஆதரிப்போம், இல்லை என்றால் தனித்து நிற்போம் எனவும் தெரிவித்தார். அதேபோல், பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளிப்பேன் எனக் கூறிய பாமக.,தான் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.   அதேபோல் சொந்த பலத்தில் தேர்தல் களம் காண்போம் எனத் தெரிவித்துள்ளார். 


சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “ பாமக வேடந்தாங்கல் பறவையைப் போல் கூட்டணி வைத்துக்கொள்கின்றது. வேடந்தாங்கல் பறவைகள்தான் குளத்தில் தண்ணீர் இருக்கும்போது வரும். தண்ணீர் வற்றியப் பின்னர் அங்கிருந்து சென்றுவிடும். இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக்கொண்டே இருக்கும். கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. வந்தால் வரவேற்போம், இல்லாவிட்டால் தனித்து நிற்போம். பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளிப்பேன் எனக் கூறிய பாமக நிறுவுனர் ராமதாஸ்தான், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள்ளார். பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டுதான் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாமகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தோம், 2021ஆம் ஆண்டு கூட்டணி வைத்தோம், என்ன நடந்தது? நாங்கள் தோற்றுத்தான் போனோம். 


கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றாலும், நாங்கள் எங்களது சொந்த பலத்தில் தேர்தலைச் சந்திப்போம். பொன்விழா கண்ட கட்சி, 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி, மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்த கட்சி. இதனை மக்களிடத்தில் கூறி வாக்கு கேட்போம். அதிமுக ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது. இன்றைக்கு இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளதற்கு அடித்தளமிட்ட கட்சி அதிமுக. எனவே நாங்கள் கூட்டணியை நம்பி கட்சி நடத்தவில்லை. 


டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது குறித்து, அவர் தவறு செய்தாரா இல்லையா, அவர் ஊழல் புரிந்தாரா இல்லையா எனத் தெரியாமல் கருத்து கூறமுடியாது. மேலும் டெல்லியில் தவறு நடந்திருந்தால் தவறு, இல்லை என்றால் அதாவது கெஜ்ரிவால் தவறு செய்யவில்லை என்றால் அவரை கைது செய்தது தவறு” இவ்வாறு தெரிவித்தார்.