சென்னை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையமாக சேலையூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் பகுதியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் காவல் நிலையங்களில் ஒன்றாக, இந்த காவல் நிலையம் உள்ளது. சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜான் செல்வராஜ். இவர் நீண்ட காலமாக, நீதிமன்ற அலுவல் விவகாரங்களை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு பல குற்றவாளிகளுடன் நெருங்கிய பழக்கம் உள்ளது.
ஜான் செல்வராஜ்
திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ் மடிப்பாக்கத்தில், தங்கி சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து வந்த நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றவர் தற்போது வங்கதேச ராணுவத்தில் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ வீரர்கள் விசாரித்துள்ளனர். விசாரணையில் இவர் காவல் அதிகாரி என தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட மாநில காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை
சட்ட விரோத கும்பலுடன் தொடர்பு இருந்ததன் காரணமாக எல்லை கடந்து சென்றாரா? இவர் எல்லையை ஊடுருவ என்ன காரணம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இவர் தங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எதற்காக மருத்துவ விடுமுறை என கூறிவிட்டு வங்கதேசம் எல்லைக்கு சென்றார்? என அவருக்கு நெருங்கிய தொடர்புகளிடமும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை எடுக்கும் அவர் அதேபோன்று நேரத்தில் வங்கதேசம் சென்றாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சர்வதேச கும்பல் யாரிடம் தொடர்பில் இருக்கிறாரா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.