மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக இடையிலான கூட்டணி உறுதிசெய்யப்பட்டு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


நாடே மிகவும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டி மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 


அதிமுக கூட்டணியில் தேமுதிக


இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தது. பெரிய கட்சிகள் எதுவும் அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையிலும், வேட்பாளர்கள் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எனினும் தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.


முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷும் உடன் வந்தார். இவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.முனுசானி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிலையில், கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக தற்போது உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.


5 தொகுதிகள் ஒதுக்கீடு


இதன்படி, தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் கடலூர், விருதுநகர், தஞ்சாவூர், மத்திய சென்னை, திருவள்ளூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விருதுநகர் தொகுதியில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கூட்டணியில் கையெழுத்து இட்ட பின்பு பேசிய பிரேமலதா, ’’ஜெயலலிதா இல்லாமல், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது. அதேபோல விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக பொதுச் செயலாளராக நான் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது. 3 தெய்வங்களின் ஆசியோடு எங்களின் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்’’ என்று பிரேமலதா நெகிழ்ச்சியாகப் பேசினார். 


அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் யார் யார்?



  • வட சென்னை - இராயபுரம் மனோ

  • தென் சென்னை - ஜெயவர்தன்

  • காஞ்சிபுரம் - ராஜசேகர்

  • அரக்கோணம் - விஜயன்

  • விழுப்புரம் - பாக்கியராஜ்

  • சிதம்பரம் - சந்திரஹாசன்

  • நாமக்கல் - தமிழ்மணி

  • கரூர் - கே.ஆர்.என். தங்கவேல்

  • சேலம் - விக்னேஷ்

  • மதுரை - சரவணன்

  • தேனி - நாராயணசாமி

  • கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்

  • ஆரணி - கஜேந்திரன் 

  • நாகப்பட்டணம் - சுர்ஜித் சங்கர்

  • ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

  • ராமநாதபுரம் - ஜெயபெருமாள் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.