சிம்லா முத்துசோழன் அறிவிப்பு ஏன்?
நெல்லை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்லா முத்துசோழனை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவரை அறிவித்த சிறிது நேரத்திலேயே அவரை பற்றிய செய்திகள் அனைத்து சமூக வலைதலங்களிலும் பரவியது. குறிப்பாக சிம்லா முத்துசோழன் ஆரம்பம் முதலே திமுகவில் இருந்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர விசுவாசியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் நின்று போட்டியிட்டுள்ளார். அப்போது ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்ற முறையில் அனைவராலும் அறியப்பட்டவர். அதன் பின்னர் திமுகவில் தொடர்ச்சியாக அவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்றும் அந்த அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. அதன் காரணமாகவே கடந்த 13 நாட்களுக்கு முன்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதோடு அவர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் தெரிகிறது. மேலும் அதிமுகவில் பெரிய அளவில் கூட்டணி அமைக்கப்படாததாலும், பலர் செலவு செய்ய தயங்கியதாகவும் கூறப்பட்ட நிலையில் சிம்லா முத்துசோழனுக்கு நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
எதிர்ப்பும் மாற்றமும்:
சிம்லா முத்துசோழன் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக சிம்லா முத்துச்சோழன் ஜெயலலிதா அவர்களை எதிர்த்து ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியில் போட்டியிட்டவர். சில தினங்களுக்கு முன், தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி. மு.க.,வில் இணைந்தார். அவருக்கு உடனடியாக, சீட் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு கட்சி பிளவுபட்டது. அப்போது ஜானகி அணி வேட்பாளருக்கு முகவராக இருந்ததாக, பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சிக்கும் பழனிசாமி, அம்மாவை எதிர்த்தவருக்கு வாய்ப்பு கொடுத்தது என்ன நியாயம் என்று தெரியவில்லை. அதேபோல, கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத டாக்டர், ஒப்பந்ததாரர்கள் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள தொகுதி வேட்பாளர் ஒருவருக்கு வேஷ்டி கட்டவே தெரியவில்லை. ஏனெனில், இதுவரை அவர் வேஷ்டி கட்டியதில்லை. நேற்றுதான் அலுவலகமே வந்துள்ளார். அம்மா இருந்த போது கட்சிக்கு விசுவாசமானவரா என்று மட்டுமே பார்க்கப்படும். பணம் இல்லாத பலருக்கு வாய்ப்பு வழங்கினார். அதேபோல அவர் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், மற்றொரு கோஷ்டி, அறிவித்த வேட்பாளருக்கு எதிராக குரல் எழுப்பும். கட்சி அலுவலகம், அம்மா அவர்களின் வீடு முன் போராட்டத்தில் ஈடுபடுவர். ஏனெனில் வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை. இம்முறை" கட்சியினர் வேட்பாளர் குறித்து கவலைப்படவில்லை. யாரோ நிற்கட்டும் என்ற மனநிலையில் உள்ளனர். நமக்கு சீட் கிடைக்காமல் இருந்தால் நல்லது என்ற மனநிலை. இது கட்சிக்கு நல்லதல்ல என்றும் அதே போல ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அவருக்கு இரட்டை இலையில் வாய்ப்பா? எனவே அவருக்கு அதிமுகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் ஒரு சிலர் கருத்து வெளியிட்டனர். இந்த சூழலில் தான் சிம்லா முத்துசோழனை மாற்றி அவருக்கு பதிலாக ஜான்சிராணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது தலைமைக்கழகம்.
யார் இந்த ஜான்சிராணி:
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது கணவர் முருகானந்தம். பிஏ முடித்துள்ள ஜான்சிராணி கடந்த 2005 முதல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். குறிப்பாக கடந்த 2006 முதல் 2016 வரை பேரூராட்சி கவுன்சிலராகவும், 2012 முதல் 2017 வரை திசையன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனராகவும், 2012 முதல் திசையன்விளை நகர மகளிரணியிலும் 2021 முதல் திருநெல்வேலி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் இருந்துள்ளார். அதன்பின் 2022 முதல் பேரூராட்சி தலைவராகவும், 2024 முதல் நெல்லை புறநகர் மாவட்ட கழக இணை செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்லா முத்துசோழனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகேட்டு விளம்பரம் செய்து வந்த நிலையில் தற்போது ஜான்சிராணி பெயர் அறிவித்த சில மணி துளிகளிலேயே அவரது பெயரை சுவர்களில் எழுதி வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அக்கட்சியை சேர்ந்தவர்கள். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இதுவரை கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மூவரில் இருவர் பெண்கள். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், அதிமுக சார்பில் ஜான்சிராணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று கட்சியினருமே நெல்லையை சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பில் உள்ளனர் தொகுதிமக்கள்.