செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 15வது வார்டு  பாக்கம் ஊராட்சி மற்றும் சிலாவட்டம் ஊராட்சியை  உள்ளடக்கியுள்ளது. 15வது வார்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் சுதா என்பவர் உதயசூரியன் சின்னத்திலும், பாமக சார்பில் சந்திரா என்பவர் மாம்பழம் சின்னத்திலும், அதிமுக சார்பில் யோக சுந்தரி என்பவர் சுயேட்சையாக சுயேட்சை சின்னமான தண்ணீர் குழாய்  சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரேகா  தென்னை மரம்  சின்னத்திலும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களாக பானு ஊன்றுகோல் சின்னத்திலும், தீப்பெட்டி சின்னத்தில் உமா மகேஸ்வரி ஆகிய 6  பேர் போட்டியிட்டனர். 15வது வார்டு ஊராட்சியில் மொத்த வாக்காளர்  3923 உள்ள நிலையில் , கடந்த ஜூலை 9ஆம் தேதியன்று நடந்த வாக்குப்பதிவில் 3293 வாக்குகள் பதிவாகின.



 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில்  திமுக சார்பில் சுதா 1430 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட யோக சுந்தரி மாசி 1433 வாக்குகளை பெற்று  திமுகவை விட அதிமுக சுயேட்சை வேட்பாளர் மூன்று வாக்குகள் கூடுதலாக பெற்று 15 வது வார்டு உறுப்பினராக அதிமுக சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சுந்தரி வெற்றிப்பெற்று   தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 



 

மேலும், அதற்கான  சான்றிதழையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அவரிடம் வழங்கினர். அதனைதொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் ஆரவாரமாக ஊர்வலமாக சென்று பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுகவினர் அவரது வெற்றியை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், அவருக்கு மாலை, சால்வை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.



 

இதனிடையே மறுவாக்கு எண்ணிக்கை கோரி திமுகவினர் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை, சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது