கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மாபெரும் ஆயுதம்!- முன்னாள் முதல்வர் கருணாநிதி


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கீழ், 2022- 23ஆம் கல்வி ஆண்டில், பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை, நம்ம ஸ்கூல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


அந்த வகையில் தமிழகக் கல்வித் துறையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்த முக்கியத் திட்டங்கள் என்னென்ன? காணலாம். 


* இலவசக் காலை உணவு திட்டம்
* புதுமைப் பெண் - உயர் கல்வி உறுதித்தொகைத் திட்டம்
* நான் முதல்வன் திட்டம் 
* எண்ணும் எழுத்தும் திட்டம்
* இல்லம் தேடிக் கல்வி திட்டம்
* புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்
* இலவச உயர் கல்வித் திட்டம்
* சிறார், ஆசிரியர் இதழ்கள்
* கலைத் திருவிழா 
* ஆசிரியர் மனசு 
* நூலக நண்பர்கள்
* வானவில் மன்றம்
* நம்ம ஸ்கூல் திட்டம் 


இலவசக் காலை உணவு திட்டம் 


இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு அளித்து, விளிம்பு நிலைக் குழந்தைகள் தடையின்றிப் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தது. குழந்தைகளுக்கு உணவு அளிக்கப் பணம் வேண்டுமே என்ற கவலையில் இருந்து பெற்றோரை விடுவித்தது. குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியது.


அரசே தனது மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளித்தது. இது, மக்களின் வறுமையை மட்டும் ஒழிக்காமல் உணவு என்னும் காரணி மூலம் சமுதாயத்தில் ஊடுருவியிருந்த அதிகாரத்தையும் ஒழித்தது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். 




முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் (Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம்  செயல்படுத்தப்பட்ட நிலையில், படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிது. 


புதுமைப் பெண் திட்டம் 


முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே இருந்த மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இந்தத் திட்டம் புதுமைப் பெண் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  


இந்தத் தொகை நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும். எனினும் தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன. 


நான் முதல்வன் திட்டம் 


ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது 69ஆவது பிறந்தநாளை கடந்த மார்ச் 1ஆம் தேதி கொண்டாடினார். அன்று 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடங்கி வைத்தவர், இந்தத் திட்டம் தன்னுடைய கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 




இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவிகளின் தனித் திறமைகள் அடையாளம் காணப்பட்டு, அவை ஊக்குவிக்கப்படும். தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். இதன்மூலம், மாணவர்களின் வேலை பெறும் திறன் (employability) பெருகும் என்று தெரிவிக்கப்பட்டது.


இல்லம் தேடிக் கல்வித் திட்டம்


2022- 23ஆம் கல்வி ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மீண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. அது என்ன இல்லம் தேடிக் கல்வி?


கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிலேயே முடக்கப்பட்டு இருந்தகுழந்தைகளின் கற்றல் இடைவெளி / இழப்பை ஈடுசெய்ய இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் மாலையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒன்றில் இருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 


எனினும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்தும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முறைசாராக் கல்வி முறையை இந்தத் திட்டம் ஆதரிப்பதாகவும், ஆசிரியர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 


தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள்  


முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் மாதிரிப் பள்ளிகளையும் தகைசால் பள்ளிகளையும் (School of excellence) செப்டம்பர் 5ஆம் தேதி அன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.  மாதிரிப் பள்ளிகள் மாணவர்களின் படிப்புத் திறமைகளை மேம்படுத்தி, தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர வைக்க உதவும். இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில், உண்டு, உறைவிட வசதிகள் செய்யப்பட்டிருக்கும். 


அதே நேரத்தில் தகைசால் பள்ளிகளில், உண்டு, உறைவிட வசதிகள் இருக்காது. எனினும் புரொஜக்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள், திறன் வகுப்பறைகள், நீச்சல்குளம், உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.


கலைத் திருவிழா 


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 


நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.




மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அவர்களுக்கு கலையரசன், கலையரசி ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 


முற்றிலும்‌ எழுத, படிக்கத்‌ தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவைக் கற்பிப்பதே இந்தத் திட்டம் ஆகும். நடப்பு நிதியாண்டில் இருந்து 2026-27ஆம்‌ நிதியாண்டு வரை செயல்படுத்தும்‌ வகையில்,‌ ஐந்தாண்டுத்‌ திட்டமாக புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்‌ உருவாக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின்‌ முதற்கட்டமாக, 5 லட்சம்‌ பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும்‌ எண்ணறிவுக்‌ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் அம்சத்தைத் தமிழக அரசு அமல்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 


எண்ணும் எழுத்தும் இயக்கம் 


கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுகட்டவும், 2025ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அனைத்துக்‌ குழந்தைகளுக்கும்‌ எழுத்தறிவும்‌ எண்ணறிவும்‌ கிடைத்துவிட வேண்டும்‌ என்ற வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


1 முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்களை அறிதல் ஆகியவற்றைக் கற்பிக்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 


சிறார், ஆசிரியர் இதழ்கள் 


குழந்தைகளின் அறிவுக் கண்களைத் திறப்பதோடு மட்டுமின்றி, இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பருவ இதழ்கள் தொடங்கப்பட்டன. 


கடந்த அக்டோபர் மாதம் இவற்றை முதல்வர் வெளியிட்டார். அப்போதில் இருந்து 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6ஆம் வகுப்பிலிருந்து 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  ‘தேன்சிட்டு’  என்கிற இதழும் மாதம் இரு முறை இதழாக வெளியிடப்பட்டு வருகிறது.  இவை மட்டுமல்லாமல்,  ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்பட்டு வருகிறது. 





இலவச உயர் கல்வி


அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆகும் முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிக்கத் தேவையான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கிறது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெற்று வருகின்றனர். 


ஆசிரியர் மனசு 


ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொயாமொழி, தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகத்தை உருவாக்கினார். அங்கு "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  


வானவில் மன்றம் 


மாணவர்களிடையே அறிவியலையும் கணிதத்தையும் இனிமையானதாகவும் எளிதானதாகவும் மாற்ற, வானவில் மன்றம் என்னும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். 6 - 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்த ரூ.25 கோடி நிதியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட 710 பேர் கருத்தாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் 38 மாவட்டங்களில் உள்ள 13,200 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 20 லட்சம் மாணவர்களைச் சந்திக்க உள்ளனர். அப்போது வகுப்பு ஆசிரியர்களின் துணையுடன் கற்றல் இணை செயல்பாடுகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.



நூலக நண்பர்கள் 


வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக நூலக நண்பர்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, நூலகத்துக்கு வரமுடியாத மாற்றுத் திறனாளிகள், வயதான மக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மருத்துவமனை உள்நோயாளிகள் உள்ளிட்டோர் இருக்குமிடத்துக்கே சென்று நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ.56 லட்சம் மதிப்பீட்டில், 15 லட்சம் தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.


ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அவர்கள் மூலம் வாசிக்க விரும்புவோரின் இல்லம் தேடிச் சென்று நூல்கள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ''இதை செலவு என சொல்வதை விட அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும்'' என்று கூறியிருந்தார்.


இவை தவிர, இணைய வழியில்‌ பணிப்பலன்களைப்‌ பெறுவதற்கான செயலி மற்றும் ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி ஆகிய இரண்டு திட்டங்களும் இந்தியாவிலேயே முதல்முறையாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், மாவட்ட மத்திய நூலகங்கள் உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட்டன. 




நம்ம ஸ்கூல் திட்டம்


’நம்ம ஸ்கூல்’ என்ற அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 19ஆம் தேதி அன்று தொடங்கிவைத்தார். இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கக்கூடிய நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்யப்படும். அதேபோல சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஐஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 


எனினும் இந்தத் திட்டம் 2019-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்று விமர்சனம் எழுந்ததும் நினைவுகூரத்தக்கது.