'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டலைக் காட்டிலும்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலில்தான் புண்ணியம் கோடி!' என்றார் பாரதி.
'பிச்சை எடுத்தாவது கற்று விடுங்கள்' என்றார் ஒளவை.
'கல்வி யாராலும் அழிக்கவோ, திருடவோ முடியாத செல்வம்' என்றார் திருவள்ளுவர்.
படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கல்வி கற்க மாணவர்களை வரவைக்க, பள்ளிகளிலேயே உணவு கொடுத்தார் படிக்காத மேதை காமராசர். மத்திய அரசின் உதவியுடன், கொடுக்கும் உணவை சத்தாக வழங்கினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1982ஆம் ஆண்டு கிராமப்புற பகுதிகளில் 2 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
அவருக்குப் பின்னர் வந்த கலைஞர் கருணாநிதி சத்துணவுடன் குழந்தைகளுக்கு அவித்த முட்டையைக் கொடுத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை ஆரம்பித்து, உணவும் தானியங்களும் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தார். சத்துணவுடன் காய்கறிகளையும் சேர்த்து வழங்கினார் ஜெயலலிதா. எனினும் இவை அனைத்துமே மதிய உணவுத் திட்டமாக மட்டுமே தொடர்ந்தன.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் காலை உணவு
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட சில இடங்களில் உள்ள பள்ளிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் 'முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு இடமில்லை', 'வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாது' என்று தெரிவிக்கப்பட்டது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இந்த சூழலில், காலையில் பள்ளிக்கு வரும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்தான ஊட்டச்சத்துடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்துள்ளார்.
அரசு உணவு மட்டும்தான் கொடுத்ததா?
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்துவரும் மதிய சத்துணவு, விளிம்பு நிலைக் குழந்தைகள் தடையின்றிப் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தது. குழந்தைகளுக்கு உணவு அளிக்கப் பணம் வேண்டுமே என்ற கவலையில் இருந்து பெற்றோரை விடுவித்தது. குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியது.
அரசே தனது மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளித்தது. இது, மக்களின் வறுமையை மட்டும் ஒழிக்காமல் உணவு என்னும் காரணி மூலம் சமுதாயத்தில் ஊடுருவியிருந்த அதிகாரத்தையும் ஒழித்தது. இந்த சூழலில் மாணவர்களுக்குக் காலை உணவு என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அஸ்தினாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி சங்கரியின் தாய் அங்காளம்மாள் கூறும்போது, ''எனக்கு 4 பொம்பளப் பசங்க, ஒரு பையன். தினமும் 100 நாள் கூலி வேலைக்குப் போறேன். காலைல கிளம்பிப் போனா வர நைட்டாகிடும். வந்தபிறகு உடம்பு வலி பயங்கரமா இருக்கும். சிரமப்பட்டு சாப்பாடு செஞ்சு வைச்சிட்டு, சரியா சாப்பிடாமக்கூட தூங்கிடுவேன்.
காலைல எழுந்தா அங்க கிளம்பதான் நேரம் சரியா இருக்கும். பாப்பா சாப்பிட மாட்டான்னு நினைச்சு சில நாட்கள் சமைச்சு வைப்பேன். சில நாள் முடியாது. இனி அப்படி பண்ண வேண்டியதில்லை. அரசே உணவு கொடுக்கறதால இனி கவலைப்படாம வேலைக்குப் போகமுடியும்.
வேலை இல்லாத காலத்துல சாப்பாட்டுக்குக் கஷ்டம் ஆகிடும். அப்போ நேரம் இருந்தாலும், மளிகை வாங்கக் கையில் காசு இருக்காது'' என்கிறார்.
மாணவி சங்கரி கூறும்போது, ''அப்பா இல்லை. அம்மாதான் வேலைக்குப் போய் எங்களைப் பார்த்துக்கறாங்க. அவங்க கஷ்டப்படறதைப் பார்த்துட்டு, நிறைய நாள் சாப்பாடு செய்ய வேணாம்னு அம்மாகிட்ட சொல்லிட்டு, சாப்பிடாமயே ஸ்கூல் வந்துருக்கேன். கிளாஸ்ல நிறைய நாள் மயக்கம் வந்துருக்கு. என்னன்னு மத்தவங்க கேட்கும்போது உண்மையை சொல்லக் கூச்சப்பட்டு உடம்பு சரியில்லைன்னு சொல்லி இருக்கேன். இனி அந்தப் பிரச்சினை இருக்காது. ஸ்கூலுக்கு வந்து சாப்பிட்டுட்டு தெம்பா படிப்பேன்'' என்கிறார் சங்கரி.
அரசு வழங்கிய மதிய உணவை மட்டுமே அடிப்படையாக வைத்து, பள்ளிப் படிப்பை முடித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்போர் பலர். அந்த வகையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.