கற்க வயது தடையில்லை என்று உணர்த்தியவரும் நாரி சக்தி விருதாளருமான கேரளாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா, வயது மூப்பு காரணமாக நேற்று இரவு (அக்.10) காலமானார். அவருக்கு வயது 101.
கேரள மாநிலத்தில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி அறிவு அளிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதியோர்களுக்கு, சிறப்புத் திட்டங்கள் மூலம் கற்பித்தல் பணி நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அட்சர லக்ஷம் என்ற பெயரில் முதியவர்களுக்கு எழுத்துத் தேர்வு கேரள அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
யார் இவர்?
2018-ல் நடைபெற்ற இந்தத் தேர்வில் 100-க்கு 98 மதிப்பெண்களைப் பெற்று கார்த்தியாயினி அம்மா பிரபலம் ஆனார். அப்போது அவருக்கு வயது 96. மாநிலம் முழுவதும் 40,363 தேர்வர்கள் எழுதிய தேர்வில் முதல் இடம் பெற்றிருந்தார் கார்த்தியாயினி. அட்சர லக்ஷம் தேர்வு அடிப்படையில் கணிதம், எழுதுதல், வாசித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேர்வில் எழுதுவதில் 40-க்கு 38 மதிப்பெண்களும் கணிதம், எழுதுதல், வாசித்தலில் முழு மதிப்பெண்களும் பெற்று இருந்தார். இதன்மூலம் நாடு முழுக்கப் பிரபலம் ஆனார். பிரதமர் மோடி, இவரைச் சந்தித்துப் பாராட்டினார்.
பள்ளிக்கே செல்லாமல், வீட்டு வேலை செய்துகொண்டும், துப்புரவுப் பணியாளருமாக இருந்த கார்த்திகாயாயினி அம்மா, தன் மகள் அம்மிணி அம்மாவின் ஊக்கத்தால் படிக்க ஆரம்பித்தார். நல்ல மதிப்பெண்களையும் பெற்றார். 2020ஆம் ஆண்டில், காமன்வெல்த் நன்னடத்தை தூதுவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் கார்த்திகாயாயினி அம்மாவுக்கு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த், நாரி சக்தி விருதை வழங்கினார். இதற்காக முதல்முறையாக விமானத்தில் ஏறி, டெல்லிக்குச் சென்றார்.
கற்க வயது தடையில்லை
கல்வி கற்க வயது தடையில்லை என்று நிரூபித்தவர் கார்த்திகாயாயினி அம்மா. வயது மூப்பைக் காரணம் காட்டாமல், சவால்கள் பலவற்றைக் கடந்து சாதித்த ஆளுமை.
2022ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கார்த்திகாயாயினி, அப்போதில் இருந்து படுத்த படுக்கையாக மாறினார். இதற்கிடையே ஆலப்புழாவில் உள்ள தனது வீட்டில் நேற்று (அக்.10) இரவு காலமானார். அவருக்கு வயது 101. அவரின் இறுதிச் சடங்குகுகள் நாளை (அக்.12) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளன.
முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்
இதற்கிடையே கார்த்திகாயாயினி அம்மாவுக்கு கேரளத்தின் பெருமை என்று புகழாரம் சூட்டியுள்ள முதல்வர் பினராயி விஜயன், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கார்த்திகாயாயினி அம்மாவின் மறைவு, நவீன கேரளாவை உருவாக்குவதில் உதவிகரமாக உள்ள எழுத்தறிவு இயக்கத்துக்குப் பேரிழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.