புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பிராந்தியங்களில்‌ எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து புதுவை மாநிலக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.


புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் இல்லாததால், தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தையே புதுச்சேரி பின்பற்றுகிறது. இந்த நிலையில் அங்கு கோடை விடுமுறைக்குப் பின் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்தது.




இந்த நிலையில் இதுகுறித்துக் கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதன்படி, ''புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பிராந்தியங்களில்‌ 10, 11 மற்றும்‌ 12- ஆம்‌ வகுப்புகளுக்கு 05.05.2022 அன்று தொடங்கிய பொதுத்தேர்வுகள்‌, நாளை (31.05.2022) முடிவடைகின்றன. விடைத் தாள்‌ மதிப்பீட்டுப்‌ பணிகள்‌ 01.06.2022 முதல்‌ தொடங்கி நடைபெற உள்ளன.


இந்த நிலையில் புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பிராந்தியங்களில்‌ எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. 


ஜூன் 23 பள்ளிகள் திறப்பு


புதுச்சேரி முதலமைச்சர்‌ ரங்கசாமியின் ‌அறிவுறுத்தலின்படி எதிர்வரும்‌ 2022-23ஆம்‌ கல்வி ஆண்டிற்கு புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பிராந்தியங்களில்‌ 1 முதல்‌ 10 மற்றும்‌ 12 ஆகிய வகுப்புகளுக்கு 23.06.2022 (வியாழக்கிழமை) அன்று பள்ளிகள்‌ திறக்கப்படும்‌.


10 ஆம்‌ வகுப்புத் தேர்வு முடிவுகள்‌ 17.06.2022 அன்று வெளியிடப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது அன்று முதல்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ 11ஆம்‌ வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள்‌ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


11ஆம்‌ வகுப்பு தொடங்கும்‌ நாள்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌'' என புதுவை மாநிலக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண