தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு எத்தனை மணிக்கு வரவேண்டும்? பள்ளி வேலை நேரம் என்ன? என்பன குறித்த கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.


இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மலைக் கொழுந்தன் என்பவர், கரூர் மாவட்டத்தில் இருந்து சில கேள்விகளை முன்வைத்து மனு அளித்திருந்தார். அதற்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


* காலை 9.00 மணி முதல் மாலை 4.10 மணி முடிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரம் செயல்படுகிறது.


* தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் காலை 8.45 மணிக்கும் மற்றும் ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் வருகை தர வேண்டும். (காலை உணவுத் திட்டத்தால் தற்போது நேரம் மாற்றப்பட்டு உள்ளது.)


 மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம்


* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.20 மணி முதல் மாலை 4.20 முடிய உள்ளது.


* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு வருகை தர வேண்டும்.


* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.


உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்


* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் குழுவின் தீர்மானம் மற்றும் உயர் அலுவலர்களின் ஒப்பதல் பெற்று வேலை நேரத்தை உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்.


ஆர்டிஇ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. கரூர் மாவட்டக் கல்வி அலுவலரும் பொதுத் தகவல் வழங்கும் அலுவலருமான அதிகாரி இந்த விவரங்களை அளித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Kalai Thiruvizha: 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா; ஆக.22 தொடக்கம்