10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 8,94264 பேரில், 8,18,743 பேர் (91.55%) தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவியர்; 4,22,591 (94.53%) தேர்ச்சி அடைந்த நிலையில், மாணவர்கள்: 3,96,152 (88.58%) தேர்ச்சி அடைந்தனர்.
முதலிடத்தில் அரியலூர்
தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஆங்கிலப் பாடத்தில் 99.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். குறைந்தபட்சமாக சமூக அறிவியல் பாடத்தில் 95.74 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.
கணிதப் பாடத்தில் அதிகபட்சமாக, 20,691 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர். தமிழ் பாடத்தில் 8 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 415 பேரும் சென்ட்டம் அடித்தனர். அறிவியல் பாடத்தில் 5,104 பேரும் சமூக அறிவியல் பாடத்தில் 4,428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தனர்.
எந்தெந்த மாணவிகள்?
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த காவிய ஸ்ரீயா, காவிய ஜனனி, சஞ்சனா அனுஷ் ஆகிய மாணவிகள், 500-க்கு 499 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தனர்.
இந்த நிலையில் 10ஆம் வகுப்புக்குப் பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்பதுதான் எல்லோரின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
10-வது படித்து முடித்த மாணவர்களுக்கு முன்பு, 3 வாய்ப்புகள் உள்ளன.
- பள்ளிக் கல்வியை முடிப்பது… அதாவது 11, 12ஆம் வகுப்புகள் படிப்பது
- டிப்ளமோ எனப்படும் பட்டயப் படிப்புகளை படிப்பது.
- ஐடிஐ எனப்படும் தொழில்படிப்புகளைப் படிப்பது.
இதில் முதல் வாய்ப்பைத்தான் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். எனினும் இவர்கள் எந்த குரூப் எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலாவது குரூப் எனப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் (PCMB) பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்யலாம். பொறியியல்தான் படிக்கப் போகிறேன் என்னும் மாணவர்கள், உயிரியல் பாடத்துக்குப் பதிலாக கணினி அறிவியலைத் (PCM) தேர்வு செய்து படிக்கலாம்.
'மருத்துவம் படிக்க ஆசை, ஆனால் கணக்கு வராது' என்னும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் (PCB) பாடங்கள் அடங்கிய 2ஆவது குரூப்பைத் தேர்வு செய்து படிக்கலாம். இந்த குரூப்பைத் தேர்வு செய்தால், எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா ஆகிய படிப்புகளில் சேரலாம். மதிப்பெண்கள் ஒருவேளை குறைந்தால், துணை மருத்துவப் படிப்புகளான பி.ஃபார்ம், நர்சிங், ஆடியாலஜி, பிஸியோதெரபி, ரேடியாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேர முடியும். இந்த மாணவர்கள், சட்டம், ஆசிரியர் படிப்புகளையும் படிக்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக 3ஆவது குரூப் உள்ளது. இந்த குரூப்பில் காமர்ஸ் எனப்படும் வணிகவியல் அல்லது அக்கவுண்ட்ஸ் எனப்படும் கணக்குப் பதிவியல் படிக்கலாம்.
என்னென்ன வேலைகளுக்குச் செல்லலாம்?
சி.ஏ. எனப்படும் ஆடிட்டர் பணி, பி.காம்., எம்.காம், அரசுப் பணி, வங்கி வேலைகளில் சேர விரும்புவர்கள் இந்த குரூப்பைத் தேர்வு செய்யலாம். கணக்குப் பதிவியல் படிக்க ஆசைப்படும் மாணவர்களும் வங்கி வேலை, அரசுப் பணிகளுக்குச் செல்லலாம். வரலாறு, பொருளாதாரவியல் பாடங்களும் இதில் அடக்கம்.
வொக்கேஷனல் எனப்படும் தொழிற்பாடப் பிரிவு
கடைசியாக தொழில் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவான வொக்கேஷனல் குரூப் உள்ளது. இந்தப் பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்கள், சிறப்பு ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புகளில் சேரலாம். மேலும் தொழில் துறை சார்ந்த பிரிவுகளிலும் வேலையில் இணையலாம்.
2. டிப்ளமோ படிப்புகள்
11, 12ஆம் வகுப்பில் சேர்ந்து வழக்கமான கல்வி முறையைப் பயில விரும்பாத மாணவர்களும் குடும்ப சூழல் காரணமாக சீக்கிரம் வேலைக்குச் செல்ல யோசிக்கும் மாணவர்களும், டிப்ளமோ எனப்படும் பட்டயப் படிப்பில் சேரலாம்.
இது பெரும்பாலும் 3 ஆண்டுப் படிப்பாக இருக்கும். இதில், இசிஇ, இஇஇ, மெக்கானிக்கல், சிவில், கணினி, ஆட்டோமொபைல் எனப் பல பிரிவுகள் உள்ளன. அதேபோல, மருத்துவத் துறையில் துணை மருத்துவப் படிப்புகள், கடல்சார் துறை, ஆசிரியர் துறை, சமையல் நிர்வாகம் என ஏராளமான துறைகளில் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
இந்த மாணவர்கள் டிப்ளமோ முடித்துவிட்டு பொறியியல் 2ஆம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம். அனுபவ அறிவு அதிகம் இருப்பதால், பொறியியல் படிப்பு எளிதாக இருக்கும். அல்லது வேலை பார்த்துக்கொண்டே, பகுதி நேர பி.இ. / பி.டெக். படிப்பிலும் சேரலாம்.
3. ஐடிஐ (ITI) சான்றிதழ் படிப்புகள்
10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இறுதியாகத் தேர்வு செய்து சான்றிதழ் படிப்புகளான ஐடிஐ தொழில் படிப்புகளைத்தான். இந்த வகை சான்றிதழ் படிப்புகள் பெரும்பாலும் 10 மாதங்கள் அல்லது ஓராண்டு பயிற்சி கொண்டதாக அமைந்துள்ளன.
ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பல துறைகளில் ஐடிஐ படிப்புகள் வழங்கப்படுகின்றன. அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில், மிகவும் குறைந்த கட்டணத்தில் உதவித் தொகையுடன் படிப்பு கற்பிக்கப்படுகிறது. படிப்பை முடித்த மாணவர்கள், சொந்தமாகத் தொழில் தொடங்கலாம்.
*
10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் தங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது? எந்தப் படிப்புக்கு எதிர்காலம் உள்ளது? என்பதை அலசி ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் படிப்புகளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.