தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் படித்து, அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகை இந்த மாதமும் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

குறிப்பாக மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகையும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயும் இந்த மாதத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்

நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சிகளில் கொடுக்கப்பட்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், இன்று உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்தலை ஒட்டி மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த பாஜக முட்டுக்கட்டை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அப்போதைய முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை 3 மாதங்களுக்கு சேர்த்து வரவு வைத்தார். 

மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

எனினும் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின்கீழ் மாதாமதாம் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இரு திட்டங்களின்கீழும் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகை, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை உறுதிசெய்யும் வகையிலும் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் என்னும் பெயரில் புதிய திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.