எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், மாணவர்களின் முன்னுரிமை பறிபோகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது. 


மாநிலக் கலந்தாய்வு எப்படி?


இதில் மாநிலக் கலந்தாய்வு அந்தந்த மாநில அரசால் நடத்தப்படுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர)  இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை மாநிலக் கலந்தாய்வின் மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன. அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களை தமிழக அரசே நேரடியாக நிரப்புகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 50% இடங்கள் மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. 


அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவை மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. 


புதிய ஒழுங்குமுறை


இதுநாள் வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசே நேரடியாகக் கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து இந்த நடைமுறைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.


இதற்கிடையே சென்னை மருத்துவக் கல்லூரியின் 187ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி, வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’மருத்துவத்தில் பொதுக் கலந்தாய்வை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். கடந்த மாதம் பொதுக் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பால், 7.5 % இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். வட மாநில, வடகிழக்கு மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க நேரிடும். தமிழ்நாட்டு மாணவர்கள் இங்கே படிக்க வாய்ப்பில்லாமல் போகும். தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக் குறியாகும். இது ஜனநாயக விதிகளை மீறியதாக அமையும். 


பொதுக் கலந்தாய்வு சட்டத்துக்குப் புறம்பானது என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பினோம். இந்த ஆண்டு பொதுக் கலந்தாய்வு இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் திடீரென 2 நாட்களுக்கு முன்பு, பொதுக் கலந்தாய்வு என்று தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவத்தில் பொதுக் கலந்தாய்வை முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். எப்படியேனும் அந்தக் கலந்தாய்வைத் தடுத்து நிறுத்துவோம். மருத்துவக் கல்வி வழங்குவதில் சிறப்பான இடத்தில், இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது’’.


இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.