மாணவியருக்கு நோய்‌ தொற்று ஏற்படாமல்‌ தடுக்க கட்டாயம்‌ ஒரு தனி கழிப்பறையை பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ மற்றும்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌ உதவியுடன்‌ ஏற்படுத்த வேண்டும்‌ என்று பாமக நிறுவனர்‌ ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை வாட்டர் பெல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ், பள்ளியில் ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இந்த மணி வழக்கமான மணி சத்தத்தில் இருந்து, மாறுதல் ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது குழந்தைகள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவார்கள். எனினும் பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து, 3 முறை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இதன்படி பள்ளிகளுக்கு மாணவர்கள் வாட்டர் பாட்டிலை தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள்

இதன்படி வகுப்பறைகளில் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக் கூடாது. வகுப்பு சூழலுக்கு இடையூறு நேராதவாறு, உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவியருக்கு நோய்‌ தொற்று ஏற்படாமல்‌ தடுக்க கட்டாயம்‌ ஒரு தனி கழிப்பறையை பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ மற்றும்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌ உதவியுடன்‌ ஏற்படுத்த வேண்டும்‌ என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“வாட்டர் பெல் முறை வரவேற்கத்தக்கதுதான்‌. இதைவிட பெரிய விஷயம்‌ என்னவென்றால்‌ மாணவியருக்கு நோய்‌ தொற்று ஏற்படாமல்‌ தடுக்க “கட்டாயம்‌ ஒரு தனி கழிப்பறை” - பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ மற்றும்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌ உதவியுடன்‌ ஏற்படுத்த வேண்டும்‌.

பள்ளிக்கூடங்களில்‌ உள்ள மாணவ மாணவியருக்கு வகுப்பறையில்‌ இருக்கும்‌போது தண்ணீர்‌ குடிப்பதற்காக தமிழக அரசால்‌ அறிமுகப்படுத்தப்பட்ட வாட்டர் பெல் முறை வரவேற்கத்தக்கதுதான்‌. இது மிகவும்‌ சிறிய விஷயம்‌தான்‌.

போதிய அளவில்‌ இல்லை

இதைவிட பெரிய விஷயம்‌ என்னவென்றால்‌ அரசு பள்ளிகளில்‌ பெரும்பாலான பள்ளிகளில்‌ கழிப்பறை வசதி போதிய அளவில்‌ இல்லை.

இதனால்‌ மாணவியர்‌ படுகின்ற அவதிக்கு அளவே இடையாது. அவர்கள்‌ தங்களுடைய இயற்கை உபாதையை கழிக்காமல்‌ அப்படியே தம்பிடித்துக்‌ கொண்டு மாலை வீட்டிற்கு சென்ற பின்‌தான்‌ இயற்கை உபாதையை கழிக்கிறார்கள்‌. இந்த கட்டுப்பாடு காரணமாக நிறைய பிரச்சினையை சந்திக்கிறார்கள்‌. ஆகவே ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும்‌ மாணவியருக்கு என தனி கழிப்பறையை ஏற்படுத்தி முறையாக பராமரிப்பு செய்து வந்தால்‌ நோய்‌ தொற்று ஏற்படாமல்‌ தடுக்கப்படுவார்கள்‌.

கட்டாயம்‌ ஒரு கழிப்பறை

இவற்றை பள்ளிகளில்‌ உள்ள பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ மூலம்‌ மற்றும்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌ மூலம்‌ கட்டாயம்‌ ஒரு கழிப்பறை என்ற நடைமுறையை மாநிலம்‌ முழுவதும்‌ ஏற்படுத்த வேண்டும்‌.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.