சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பாலகுருநாதன் மகன் 29 வயதுள்ள அஜித் குமார் என்பவர் மடப்புரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தாயும் மகளும் ஒரு காரில் வந்தவர்கள் நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன்பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்ட தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர்.
காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மாலை 7 மணி அளவில் அஜித்குமாரை காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். ஆய்வாளரும் சார்பாய்வாளரும் விசாரித்து மானாமதுரையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு படையினரிடம் அஜித்குமார், அவரின் தம்பி நவீன்குமார், காரை நிறுத்த உதவி செய்த நபர் மற்றும் 2 பேர் ஆகிய ஐந்துபேரை விசாரணைக்காக கூட்டிச்சென்று திருப்புவனம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சீச்சாச்சேரி களம், மடப்புரம் விலக்கு மாணவர்கள் விடுதிக்குப்பின்புறம், பேருந்து டிப்போ பின்புறம் உள்ள ஆற்றோரப் பாதை ஆகிய மூன்று இடங்களில் வைத்து அடுத்தநாள் மாலைவரை அடித்து விசாரணை செய்துள்ளனர். சித்திரவதை தாங்காமல்
எல்லோரும் இருக்கும் இடத்திற்கு சென்றால் யாராவது தலையிட்டு காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மடப்புரம் கோவில் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் பின்புறம் கூட்டி சென்றால் எடுத்து தருகிறேன் என்று அஜித்குமார் கூறியதை கேட்டு அங்கே கூட்டிச் சென்ற காவலர்கள் அங்கு உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து கேட்டபோது உங்கள் சித்திரவதை தாங்காமல்தான் அவ்வாறு கூறினேன், நகை திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் அவன் காலில் ஒருவரும் தலைப்பகுதியில் ஒருவரும் ஏறிநின்று பலம் கொண்டுச்அடித்து தாக்கியதில் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருவதை கண்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்ற பொழுது இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே அஜீத் குமாருடன் கூட்டிச்சென்ற அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டனர்.
சனி இரவு 11 மணிக்கு மேல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 29ஆம்தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு பிரேதப் பரிசோதனைச்நடைபெற்றுள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன் திருப்புவனம் நீதித்துறை நடுவர் இறந்துபோன அஜித் குமாரின் தாயார் மற்றும் சகோதரர் நவீன் குமார் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த சூழலில் இது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். முதல் தகவல் அறிக்கை சமர்பிக்காமல் ஏன் விசாரணை செய்தீர்கள் என பல்வேறு கேள்வி எழுப்பினார். இரண்டாவது நாள் விசாரணை தொடங்கும் முன்னே அஜித் குமார் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ முன் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.