TN School Education - Vizhuthugal : தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ‘விழுதுகள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்கும் ஒரு புதிய முன்னெடுப்பு நாளை தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கும் நிலையில், திட்டத்துக்கான காரணங்கள், சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.


அரசுப்பள்ளிகளுக்கு அச்சாரமாக விளங்கும் பள்ளி மேலாண்மைக் குழுவை பலப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.


முன்வந்த முன்னாள் மாணவர்கள்


மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை தலைமை ஆசிரியரும் பள்ளி மேலாண்மைக் குழுவும் இணைந்து மேம்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் முன்னாள் மாணவர்களும் பள்ளிகளுக்கு உதவ நினைக்கின்றனர். இந்த நிலையில், நம்ம ஸ்கூல் நம்ம பெருமை திட்டத்தின்கீழ் முன்னாள் மாணவர்கள் பணமாகவோ, பொருளாகவோ, வழிகாட்டவோ உதவ முன்வந்துள்ளனர்.


’நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தைத் தாண்டி, வெளியூரில் பணிபுரியும் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களை ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைக்க, ’விழுதுகள்’ என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.


7 லட்சம் மாணவர்கள் முன்பதிவு


நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 6 மாதங்களில் 7 லட்சம் மாணவர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். அதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 2,500 முன்னாள் மாணவர்கள், திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.  


அவர்கள் மீண்டும் பள்ளிகளுக்குச் சென்று, தேவையான நிதி, வழிகாட்டல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்வர்.


உத்வேக ஆசிரியர்களுக்கும் அழைப்பு


அதேபோல தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முன்னாள் மாணவர்கள் தங்களைக் கவர்ந்த, உத்வேகம் அளித்த ஆசிரியர்களின் பெயர்களை அளித்தனர். இதில் இருந்து இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இருந்து 35 ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, நேரில் கவுரவிக்கப்பட்டு உள்ளனர்.


இவர்கள் தவிர்த்து தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. தாங்கள் படித்த பள்ளியில் தேவைப்படும் மாற்றங்களுக்கும் பள்ளியின் மேம்பாட்டிலும் பங்கெடுக்க அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். 


விழுதுகள் தொடக்க விழா எப்போது?


இதன் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நாளை (ஜனவரி 9) மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.


நிகழ்வில் காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாப் பேருரை ஆற்றுகிறார். ’விழுதுகள்’ லச்சினையை வெளியிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றுகிறார்.


அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் காணொலிகள்


நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதற்காக சமத்துவம் பேசும் 10 பாடல்கள் வெளியிடப்பட உள்ளன. அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் காணொலிப் பதிவுகளும் இடம்பெற உள்ளன.


மொத்தத்தில், பள்ளி என்ற அமைப்பு சமுதாயத்தில் தனித்து இயங்கும் நிலையை மாற்றி, சமூக இயக்கமாக மாற்ற விழுதுகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.