விழுப்புரம் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே குடியிருப்புக்கு மத்தியில் ரயில்வே இருபாலர் ஆங்கிலவழி உயர்நிலைப் பள்ளி (ரயில்வே மிக்ஸ்டு ஸ்கூல்) இயங்கி வருகிறது. சுற்றுச்சுவர் பாதுகாப்புடனும், பழங்காலத்து ஓடுகள் வேயப்பட்ட பள்ளிக் கட்டடங்களையும், விளையாட்டு மைதானம், மரங்களுடன் கூடிய, இடையூறில்லாத இயற்கைச் சூழலில் இந்தப் பள்ளி 4.2.1924 அன்று தொடங்கப்பட்டு நீண்ட காலமாக இயங்கி வருகிறது.




முதலாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளியாக தொடங்கிய இந்தப் பள்ளி 1998-இல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.


மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி: 10ஆண்டுகளுக்கு முன்புவரை 800 முதல் 1,000 மாணவ, மாணவிகளுடன் சிறப்பாக இயங்கி வந்த இந்தப் பள்ளி, தரம் குறைந்து மாணவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக இழந்தது.


பாடத் திட்டம் மாற்றம்: ஆங்கிலோ- இந்தியன் பாடத் திட்டத்துடன் ஆங்கில வழியில் இயங்கி வந்த இந்தப் பள்ளியில், ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் பயின்று வந்தனர். 2011ஆம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தியதால், ஆங்கில வழியில் இந்தப் பாடத் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


சென்னைத் தலைமையக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளி, மாவட்டக் கல்வித் துறையின் மூலம் தேர்வுகள் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து படிப்படியாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.




ரயில்வே நிர்வாகம், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி, இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. அதேபோன்று, ஊழியர்களின் பிள்ளைகள் படிக்க வைப்பதற்காக பிரதான நகரங்களில் பள்ளிகள் நடத்தி வருகிறது.

அதன்படி விழுப்புரம், வடக்கு ரயில்வே காலனி பகுதியில் ஆங்கிலோ இந்தியன் பாடப் பிரிவில் ரயில்வே உயர்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. ஆங்கிலேயேர் காலத்தில் இருந்து இயங்கி வரும் இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை சுமார், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். இதில் ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் மட்டுமன்றி, வெளி மாணவர்களும் பயின்று வந்தனர்.

இப்பள்ளியில் கல்வி மட்டுமின்றி விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வந்ததால், இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இந்த நிலை கடந்த 2007ம் ஆண்டு வரை நீடித்தது. அதன்பிறகு ரயில்வே ஊழியர்கள் மத்தியில், தனியார் பள்ளி மோகம் அதிகரிக்க துவங்கியதால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.





ஒரு வகுப்பிற்கு ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் 30 பேராவது இருந்தால் மட்டுமே வெளி மாணவர்களை சேர்க்க முடியும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் விதி. ஆனால், ரயில்வே ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்க முன்வராததால், வெளி மாணவர்களும் சேர முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு வகுப்பாக மூடப்பட்டு வருகிறது. இதுவரை எல்.கே.ஜி., முதல் 6ம் வகுப்பு வரை மூடப்பட்டுள்ளது.

தற்போது, 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை நான்கு வகுப்புகள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நான்கு வகுப்பிலும் மொத்தம் 17 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியின் பெரும்பாலான வகுப்பறைகள் பூட்டியே கிடக்கிறது.





கொரோனா காரணமாக  பள்ளி திறக்கப்படாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன, ஆன்லைன் வகுப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டதாக ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் ஜூன் 23ஆம் தேதிக்குள் மாணவர்கள் அவர்களுடைய மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு மாற்றுச் சான்றிதழ் வழங்க வரவில்லை என்றால் அவர்களின் வீட்டுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என ரயில்வே பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கடந்த 97 ஆண்டுகளாக இயங்கி வரும் ரயில்வே பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.