கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்றும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் என்னவாகின என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:
''விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளைத் தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரை, மாணவர் ஒருவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
இந்த கொடுமை நிகழ்ந்த பள்ளி வள்ளலார் பெயரில் அமைந்துள்ளது. அப்பள்ளியில் 11 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகளுக்கும் தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அவரே தாக்கப்பட்டுள்ளார்!
போதை மீட்பு சிகிச்சை பெற்றும் மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவதற்கு காரணம் புதுச்சேரி அரியூரிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் கஞ்சா தடையில்லாமல் விற்பனை செய்யப்படுவது தான். புதுவை-தமிழக எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்க இரு மாநில காவல் துறைகளும் தவறி விட்டன!
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி மாணவர்களுக்கே தடையில்லாமல் கஞ்சா கிடைக்கிறது என்பதில் இருந்தே போதை ஒழிப்பு நடவடிக்கைகள் பெயரளவுக்கு மட்டுமே நடக்கின்றன என்பது உறுதியாகிறது.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா - போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இன்னும் பல மடங்கு தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு போதையின் தீமை குறித்து எச்சரிப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.''
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானதை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சேவியர் ராமச்சந்திரன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக தினந்தோறும் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மனநல சிகிச்சை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் விக்னேஷ் என்ற மாணவன் நேற்றைய தினம் மது போதையில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இதனையடுத்து மாணவி தலைமை ஆசிரியரிடத்தில் புகார் அளிக்கவே மாணவனை அழைத்து கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை தலையில் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் தலைமை ஆசிரியரின் பின் பக்க மண்டை பகுதியில் கிழித்து கொண்டு ரத்தம் வெளியேறியதை அடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தலைமை ஆசிரியர் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பியுள்ளார். மாணவனின் ஒழுங்கீன செயலால், மாணவனால் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டு மண்டையில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.