சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்த வீரமுத்து (43) என்பவர் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதாகவும், அதற்கான பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கிருந்து விண்ணப்பம் வந்துள்ளது. அந்த விண்ணப்பத்தின் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் வீரகனூர் காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீரகனூர் காவல்துறையினர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது வீரமுத்து சிங்கப்பூர் செல்லவில்லை என்பது தெரியவந்தது. அவர் அம்மாபாளையம் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.



மேலும், வீரமுத்துவின் பேரில் போலியான பாஸ்போர்ட் எடுத்து அவரது உறவினரான ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிங்கப்பூர் சென்று ஓட்டுனராக பணியாற்றி வருவது தெரிய வந்தது. இதையடுத்து ஆள்மாறட்டம் செய்து போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வீரகனூர் காவல்துறை மூலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேஷ் கைது செய்ய சென்னை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையத்திற்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர்.


இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் ராஜேஷ் வந்து இறங்கியுள்ளார். அவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ராஜேஷ் கைது செய்யப்பட்டு சேலம் அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜேஷ் ராமநாதபுரத்தில் நூலகராக வேலை பார்த்த உறவினரான வீரமுத்துவின் ரேஷன்கார்டு, போட்டோ, டிசி உள்ளிட்ட சான்றிதழ்களை திருடி போலி பாஸ்போர்ட் எடுத்து உள்ளார். அப்போது ராஜேஷுக்கு 18 வயது நிரம்பாத காரணத்தினால் வீரமுத்துவின் பெயரில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூருக்கு சென்று ஓட்டுனராக வேலைக்கு சென்றது தெரியவந்துள்ளது.



கடந்த 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்தாண்டு அவரது பாஸ்போர்ட் காலம் முடிந்துள்ளது. இதனால் புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கிறார். அதன் விசாரணையில் சிக்கிக்கொண்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான ராஜேஷ் சேலம் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தினர். மேஜிஸ்டேட் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.