தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த 18- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் திரையுலகினரும், தொண்டர்களும் அவரது கவலையடந்தனர். ஒரு சிலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதற்கிடையே யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவத்தொடங்கின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார், “கேப்டன் நன்றாக உள்ளார். ஏன் வதந்திகளை தொடர்ந்து பரப்புகிறீர்கள். அவரை பற்றி தவறான செய்தியை போடுவதற்கு முன்னால் எங்களிடம் ஒரு வார்த்தை கேட்கலாமே. விஜயகாந்த் நன்றாக உள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார். அவரை பற்றிய வதந்தியான செய்தி ஒரு மனைவியாக எந்த அளவுக்கு எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..? நல்லா இருக்கும் கேப்டனை அந்த அளவுக்கு கேவலப்படுத்தி விட்டீர்கள். அவர் மேல் எதற்கு இத்தனை வன்மம்? அவர் நன்றாக உள்ளார். இரண்டு, மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்துடுவார். அதை அறிவித்துவிட்டு தான் நாங்கள் வீட்டிற்கு செல்வோம். நீங்கள் யாரும் அவருடன் இல்லை. கேப்டன் கூட நான் ஒரு ஆள் தான் இருக்கிறேன். அவர் நலமுடன் இருப்பதை நான் தான் கூறமுடியும். அவரை பற்றிய வதந்திகளால் மனவருத்தம் அடைந்துள்ளேன். தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமின்றி வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் உடன் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டார். கிட்டத்தட்ட 23 நாட்கள் தேமுதிக தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை இன்று காலை அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.