நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 24) வெளியாகியுள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


பிகில் படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிக்கவுள்ளது. அவரின் 68வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். அஜித்துக்கு மங்காத்தா படம் கொடுத்து அசத்திய வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அது ஒருவழியாக தற்போது நிறைவேறி விட்டதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ஜெயராம், விடிவி கணேஷ், லைலா, அஜ்மல் அமீர்,யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக  விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் நடித்த மீனாட்சி சௌத்ரி கமிட் ஆகியுள்ளார். முன்னதாக விஜய் நடித்த லியோ படம் வெளியான பிறகே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். 






கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த எதிர்பார்ப்பு அடங்குவதற்குள் தளபதி 68 அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட தொடங்கினர். இதனிடையே நேற்று (அக்டோபர் 23) ஏஜிஎஸ் நிறுவனம் ட்வீட் ஒன்றை வெளியிட்டது. அதில், “நாளை (அக்டோபர் 24) முதல் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும்,  விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நண்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 


முன்னதாக தளபதி 68 படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றிருந்து. ஒரு சில புகைப்படங்கள் தவிர எதுவும் வெளிவரவில்லை. இந்த படத்தில் எப்படிப்பட்ட  விஜய்யை திரையில் பார்க்கலாம் என்ற கேள்வியெல்லாம் ரசிகர்களுக்கு எழ தொடங்கி விட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி தளபதி 68 படத்தின் பூஜை வெளியாகியுள்ளது.