நடப்புக் கல்வியாண்டிலேயே பொறியியல் பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
ஆளுநருக்கும் ஆளும் தமிழக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநிலத்தின் பிற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில், ஆளுநர் - உயர் கல்வித்துறை அமைச்சர் மோதலும் பேசுபொருளாக மாறியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவையே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். நீண்ட காலமாக அண்ணா பல்கலைக்கழக 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. எனினும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேதி கொடுத்த பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தற்போது நடைபெற்று நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நினைவுப் பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து வரவேற்பு உரையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று பதக்கங்களை வழங்கினார்.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். அப்போது அவர் பேசியதாவது:
''பாரத தேசத்தை விஷ்வ குருவாக்க வழிகாட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார். பிரதமரின் வருகையால் அண்ணா பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது. நடப்புக் கல்வியாண்டிலேயே (2022- 23) பொறியியல் பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யும் திறன் சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்க, 150 தொழில் நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 7ஆவது செமஸ்டரில் படிக்கும் 55 ஆயிரம் மாணவர்கள், தமிழக முதல்வரின், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் மின் ஆளுமைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.''.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்