வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், மற்றும் INTI இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி மலேசியா இணைந்து எம்.பி.ஏ (Dual Degree MBA Program) திட்டத்தை குறைந்த கட்டணத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.


அதேபோல 6 மாற்றுப் பாலினத்தவர் மற்றும் 5 இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களுக்கு 100% கல்வி ஊக்கத் தொகை திட்டத்தையும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துகின்றது.


இதற்கான விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை அரசின் வர்த்தகத்துறை அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், சமூக செயல்பாட்டாளர் திருநங்கை ஓல்கா ஏரோன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், வேல்ஸ் நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர்.பிரீத்தா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சேர்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கினர்.


இரட்டைப் பட்டம்; என்ன சிறப்பு?


INTI சர்வதேசப் பல்கலைக்கழகம் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 516 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்த புதுமையான திட்டம் இரண்டு பெரிய பல்கலைக்கழகங்கள் இணைந்து உயர்கல்வியை அளிக்கின்றன. இரட்டைப் பட்டப்படிப்பு எம்பிஏ திட்டம் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மதிப்புமிக்க பல்கலைக்கழங்களின் பட்டங்களைப் பெற உதவும்.


குறிப்பாக இந்தியாவின் VISTAS-ல் இருந்து வணிக நிர்வாகத்தின் முதுகலை (MBA) மற்றும் மலேசியாவின் INTI சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஒரு MBA என இரண்டு நிறுவனங்களிலிருந்தும் பட்டம் பெறுவதன் மூலம், மாணவர்கள் சிறப்பான சம்பளத்தைப் பெறுவார்கள்.




திருநங்கைகள், தமிழ் அகதிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள்


VELS இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், திருநங்கைகள் மற்றும் தமிழ் அகதி மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்வியைத் தொடர உதவும் நோக்கில் உதவித் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.


பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீது வேல்ஸ் பல்கலைக்கழகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த திட்டம் காட்டுகிறது. விளிம்புநிலை சமூகங்களுக்கு தரமான கல்வியை அடைவதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது. திருநங்கைகள் மற்றும் தமிழ் அகதிகள் உதவித் தொகை திட்டம், மாணவர்களின் பின்னணி அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர்களும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்கும் ஒரு சிறிய முயற்சியே ஆகும்.


இந்த முயற்சியின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, திருநங்கைகள் மற்றும் தமிழ் அகதிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் சிறு முயற்சியே மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ் அகதிகள் உதவித் தொகை திட்டம் என்று வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய நிதி


தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் பிற கல்விச் செலவுகளை உள்ளடக்கிய நிதி உதவியை வழங்கும். கூடுதலாக, உதவித்தொகை பெறுவோர் தங்கள் கல்விப் பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்த வழிகாட்டுதலைப் பெறுவர் எனவும் வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.