10, 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்கு ABP நாடு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. வானமே எல்லை என்ற பெயரில் வீடியோ வடிவிலும் எழுத்து வடிவிலும் ஒரு தொடராக, இந்த வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை, பாலிடெக்னிக் படிப்புகளுக்கான வாய்ப்புகள், ட்ரெண்டிங் படிப்புகள், எப்படி பாலிடெக்னிக் கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விடை காணலாம்.
இதுகுறித்து ABP Nadu-விடம் மாநில வணிகக் கல்வி பயிலகத்தின் முதல்வர் முனைவர் முத்துக்குமார் அளித்த பேட்டி
உடனடியாக வேலைக்குப் போக வேண்டும் என்று கட்டாயத்தில் இருப்பவர்கள்தான் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்கிறார்களா? யாரெல்லாம் பாலிடெக்னிக் படிக்கலாம்?
10ஆம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம். 11ஆம் வகுப்பில் சேர்ந்து 2 ஆண்டுகள் பள்ளிக் கல்வியை முடித்து, பொறியியல் முதல் ஆண்டை முடித்த மாணவர்களுக்கு சந்தையில் வேலை இல்லை. அவர்கள், முதலாம் ஆண்டிலும் இயற்பியல், வேதியியல் படிப்புகளை மட்டுமே படித்திருப்பார்கள். ஆனால், 10ஆம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ முடித்தவர்கள் இளநிலை பொறியாளர்கள் பட்டம் பெற்றிருப்பார்கள். வேலைக்குத் தயாராக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் வேலை பார்த்துக்கொண்டே கூட, பிறகு பொறியியல் படிப்பில் சேரலாம்.
என்னென்ன படிப்புகள் பாலிடெக்னிக்கில் இருக்கின்றன?
பாலிடெக்னிக் என்பதே பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் டிப்ளமோ படிப்புகள்தான். மெக்கானிக்கல், சிவில், இசிஇ, இஇஇ, கணினி அறிவியல், ஐடி என வழக்கமான படிப்புகள் பாலிடெக்னிக்கில் இருக்கின்றன. இவற்றுடன் தரவு அறிவியல், ஏஐ படிப்புகளும் டிப்ளமோவில் இருக்கின்றன. எனினும் அவை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வழங்கப்படுவதால், மாணவர்கள் அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது முக்கியம். காமர்ஸ் டிப்ளமோ படிப்புகளும் குறிப்பிட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.
டிப்ளமோ மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளில் சிறந்து விளங்குகிறார்களே.. பாலிடெக்னிக் பாடத் திட்டம் எப்படி இருக்கும்?
பாலிடெக்னிக் பாடத்திட்டத்தில் 50 சதவீதம் பாடம், 50 சதவீதம் செய்முறை இருக்கும். செய்முறை சார்ந்து நிறைய ஆய்வகப் பயிற்சிகள் இருக்கும்.
பாலிடெக்னிக் படிப்புகளில் ட்ரெண்டிங் படிப்பு எது?
Core படிப்புகளுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. கணினி அறிவியல் படிப்புகளுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது. அதேபோல மெக்கானிக்கல், சிவில், இசிஇ, இஇஇ படிப்புகளும் மாணவர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதே நேரத்தில் சிறப்புப் பிரிவுகளில் மாணவர்கள் சேரலாம் என்று பரிந்துரைப்பேன். ஏனெனில் அதில் போட்டி குறைவு, வேலைவாய்ப்புகள் அதிகம்.
பேட்டியை முழுமையாகப் பார்க்க
கூடுதல் சந்தேகங்களுக்கு: 6382219633 (வாட்ஸப்)
இ மெயில்: education.tamil@abpnetwork.com