DMK Meeting :  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜுன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. காணொலி வாயிலாக வரும் சனிக்கிழமை கால 11 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில், திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோரும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 






துரைமுருகன் அறிவிப்பு:


திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, ஜூன்-4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில் "மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்" வருகிற 01-06-2024 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் வேட்பாளர்கள் கழக தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஜுன் 3ம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை, மாநிலம் முழுவதும் கொண்டாடுவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


டெல்லியில் முதலமைச்சர் ஆலோசனை?


திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள அதே நாளில் தான், டெல்லியில்  I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்வது எப்படி? பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் வேட்பாளர் யார்? கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி கொண்டு செல்வது எப்படி என்பன போன்ற பல விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜுன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஏழு கட்டங்களில் பதிவான வாக்குகளும், ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.