சென்னையில் நான் பார்க்காத வேலையே இல்லை என நடிகர் சூரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இயக்குநர் வெற்றிமாறன் கதையில், துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “கருடன்”. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி என பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள கருடன் படம் மே 31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகளில் சூரி பங்கேற்று வருகிறார். 


அதில் ஒரு நேர்காணலில் பேசிய சூரி, “மதுரையில் மாதம் ரூ.900 சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன். எப்படியாவது சென்னை வந்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி விட நினைத்தேன். என்னுடைய நண்பர் சினிமாவில் ஒருநாளைக்கு சாப்பாடு எல்லாம் போட்டு ரூ.500 சம்பளம் என சொன்னார்கள். கணக்கு எல்லாம் போட்டு சரி என வந்தேன். சென்னை வந்ததும் நான் செய்யாத வேலைகளே இல்லை. சினிமாவுக்கு வந்தவுடன் லாரி கிளீனர் வேலை என கூப்பிட்டார்கள் என சென்றேன். என் நண்பர் என்னிடம் ரஜினியே சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் கண்டக்டராக தான் இருந்தார். அந்த மாதிரி நினைத்துக்கொள் என சொன்னான்.


நானும் அப்படியே நினைத்து சென்று பார்த்தால், முதல் நாள் இடிந்த கட்டட கழிவுகளை அள்ளினார்கள். பின்னர் எங்கெல்லாம் போன் வருகிறதோ அங்கு டிப்பர் லாரியுடன் செல்வேன். அப்படி ஒருநாள் அடையாறு கூவம் ஆற்றில் இறக்கி விட்டார்கள். லாரி நிற்கும் நிலையில் கொக்கி போட்டு தானே கழிவை அள்ளுவார்கள் என நினைத்தேன். நெஞ்சு வரை சாக்கடை சென்று கொண்டிருக்கிறது. வேறு வழியே இல்லை என்ற நிலையில் என்னை கூட்டிச் சென்ற அண்ணனிடம் என்னன்னே சாக்கடையில் இறக்கி விடுறீங்க என கேட்டேன். நேற்று எல்லாம் நான் முகம் வரை இருக்கும் சாக்கடையில் இறங்கினேன் என சொன்னார். அந்த வேலை பார்த்தேன். 


அதன்பின்னர் சென்னையில் எல்லா இடங்களிலும் பெயிண்டிங் வேலை பார்த்திருக்கேன். சென்னையில்  பெரிய பெரிய கடைகளுக்கு பெயிண்ட் அடித்திருக்கிறேன். போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். இன்றைக்கு என் படத்துக்கு போஸ்டர் ஒட்டுவதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் சுவரில் கட்சி விளம்பரத்துக்கு பெயிண்ட் அடிப்பேன். ஆட்டோ ஓட்டியிருக்கேன். கல்யாண வீடுகளில் டெக்கரேஷன் வேலை செய்திருக்கேன்” என தெரிவித்துள்ளார்.