10, 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்கு ABP நாடு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. வானமே எல்லை என்ற பெயரில் வீடியோ வடிவிலும் எழுத்து வடிவிலும் ஒரு தொடராக, இந்த வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில், பொறியியல் மாணவர் சேர்க்கை பொறியியல் படிப்புகளுக்கான வாய்ப்புகள், ட்ரெண்டிங் படிப்புகள், எப்படி பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விடை காணலாம்.


இதுகுறித்து ABP Nadu-விடம் கல்வி ஆலோசகர் அஸ்வின் அளித்த பேட்டி


பொறியியல் படிப்புக்கு கடந்த சில ஆண்டுகளாக மோகம் குறைந்துவந்த நிலையில், இந்த ஆண்டு வரவேற்பு எப்படி இருக்கிறது?


கடந்த 2 ஆண்டுகளாக வரவேற்பு நன்றாக இருக்கிறது. பொறியியல் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. எனினும் நல்ல கல்லூரிகளில் சென்று சேர்வதை மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.


பொறியியல் படிக்க என்ன அடிப்படைத் தகுதி?


கணிதப் பாடம் பொறியியல் படிப்புக்கு அடிப்படை. எனினும் அறிவியல் பிரிவைப் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) பள்ளியில் தேர்வு செய்தவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் பயோ டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் (பயோமெடிக்கல்) பொறியியல், ஹெல்த் இன்ஃபர்மேட்டிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம். எனினும் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி உள்ளிட்ட தலைசிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்க கணக்கு பாடம் அவசியம்.



மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கை எப்படி நடக்கிறது?


ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு எழுதி மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேரலாம். ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 31 என்ஐடிகள் (தேசிய தொழில்நுட்பக் கழகம்), 26 ஐஐஐடிகளில் சேர முடியும். அதேபோல 36 மத்திய அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் சேர முடியும். போலவே மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்று, 23 ஐஐடி-க்களில் சேரலாம். ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் முதல் 2.5 லட்சம் இடம் பிடித்த மாணவர்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அட்வான்ஸ்டு தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். ஜோசா கலந்தாய்வு மூலம் இவர்களுக்குக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும்.


அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பிற அரசுக் கல்லூரிகள் ஆகிய மாநில அரசுக் கல்லூரிகளில் சேர, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தின் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்குபெற வேண்டும். இதற்கு நுழைவுத் தேர்வு எதுவுமில்லை. எனினும் மரைன் எனப்படும் கடல்சார் பொறியியல் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு (IMU CET) அவசியம்.


அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு


தனியார் கல்லூரிகளில் சேர அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வே போதும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர, அந்தந்தப் பல்கலைக்கழகங்களே நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மேலாண்மை இடங்களுக்கு, நன்கொடை கொடுத்து பொறியியல் இடங்களைப் பெறலாம்.


க்யூட் நுழைவுத் தேர்வு மூலம் இயற்பியல், வேதியியல், கணிதம் எடுத்து எழுதி, 9 மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்பில் சேரலாம். எனினும் குறைந்த அளவிலான பாடப் பிரிவுகள் மட்டுமே இதில் வழங்கப்படுகின்றன. பேராசிரியர்கள் அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதால், இந்த வாய்ப்பு குறித்து யோசிக்கலாம்.


ஒரு மாணவர் பொறியியல் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்வது எப்படி?


எல்லோரும் எலக்ட்ரானிக்ஸ் எடுக்கிறார்கள், நாமும் எடுக்கிறோம் என்று ஒரு பாடப்பிரிவைத் தேர்வு செய்யக்கூடாது. நல்ல கல்லூரியில் எந்த பாடப்பிரிவை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். கல்லூரிக்கு முதலில் முக்கியத்துவம் எடுக்க வேண்டும். தொடர்ந்து தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை உணர்ந்து முடிவு செய்ய வேண்டும்.


கல்லூரிகளைத் தேர்வு செய்யும் முன்னர் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?


பொறியியலில் இப்போதைய ட்ரெண்டிங் படிப்பு எது?


ஏஐ பொறியியல் படிப்புகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?


செயற்கை நுண்ணறிவு தனிப் படிப்பாகப் படிக்கலாமா? வழக்கமான படிப்புடன் கூடுதலாப் படித்தால் போதுமா?


என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை வீடியோ வடிவில் காணலாம்.


இதையும் வாசிக்கலாம்: Vaaname Ellai: வானமே எல்லை 1: பிளஸ் 2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?- ஓர் அலசல்!