வாழ்வில் முன்னேற ஆசைப்படுபவர்களுக்கும் உழைக்கத் துடிப்பவர்களுக்கும் எப்போதும் வானம்தான் எல்லையாக இருக்கிறது. படித்து வெற்றியை ருசிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கும் அப்படித்தான்.


10, 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்கு ABP நாடு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. வானமே எல்லை என்ற தொடரின்கீழ் இந்த வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதலில் 12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிப்பைத் தேர்வு செய்யலாம்? கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? படிக்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.


இதுகுறித்து பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ABP நாட்டுக்கு வீடியோ வடிவில் அளித்த பேட்டி:


12ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?      


ஒரு மாணவர் என்ன படிப்பு படித்தாலும் சரி, உயர் கல்வியைத் தொடங்கும் முன் 5 விதமான கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.


* 2027/ 2028-ல் நம்முடைய படிப்புக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?


* நம் துறைக்கு எத்தனை பேர் போட்டி போடுவார்கள்?


* நாம் படிக்கும்போது, பாடத்திட்டம் தாண்டி என்ன திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?


* என்ன மாதிரியான நிறுவனங்களில் என்ன ஊதியத்துக்கு வேலை கிடைக்கும்?


* வேலைவாய்ப்பு சந்தையில் எத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன? ஆகிய கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நமக்கான துறையைத் தேர்வு செய்ய வேண்டும்.


அப்படியென்றால் முழுக்க முழுக்க ஆர்வத்தின் அடிப்படையில், ஒருவர் தனது படிப்பைத் தேர்வு செய்யக்கூடாதா?


செய்யலாம், தவறில்லை. ஒருவருக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் எதிர்காலம், சான்றிதழ் படிப்புகள், திறன் வளர்ப்பு ஆகியவற்றை அறிந்துகொண்டால் சாதிக்கலாம். எல்லாத் துறைகளுக்கும் எதிர்காலம் இருக்கிறது. பாடத்திட்டத்தைத் தாண்டி ஒருவர் என்ன படிக்கிறார்களோ, அதை அடிப்படையாக வைத்தே ஒரு மாணவரின் ஊதியம், எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.


நேர்காணலை வீடியோ வடிவில் காண:



தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்து என்ன படிப்புகளைப் படிக்கலாம்?


எங்கும் ஏஐ. எதிலும் ஏஐ என்ற நிலைதான் நிலவுகிறது. அதற்காக ஏஐ படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏஐ டூல்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். 2000-களில் கணினி பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுமாறு கூறினோம். இப்போது அந்த இடத்தை, ஏஐ நிரப்பி இருக்கிறது.


இந்த ஏஐ டூல்களை எங்கு சென்று கற்பது?


இணையத்திலேயே முழுமையாகக் கற்கலாம்.  உதாரணத்துக்கு, AI for Coding, AI for Data Science, , AI for commerce என்று தேவையான துறைக்கு ஏற்ப, தகவல்களை உள்ளிட்டுக் கற்றுக்கொள்ளலாம்.


கிராமப்புற, தமிழ் மீடியம் மாணவர்கள் எப்படி படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்?


தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வழிகாட்டல்களை அறிந்துகொள்ளலாம். உங்களுடைய வானமே எல்லை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.


கல்லூரி படிப்புகளைத் தமிழ் மீடியத்தில் படிக்கலாமா? படித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்?


தமிழ் மீடியத்திலும் மாணவர்கள் படிக்கலாம். எனினும் ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய, ஒரு தகவலைப் பரிமாறிக்கொள்ளக் கூடிய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.


படிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?


எந்தத் துறையாக இருந்தாலும் சரி, துறைசார்ந்த திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். துறைகளில் செயற்கை நுண்ணறிவு டூல்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.


ஒரு கல்லூரியை மாணவர் எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?


கல்லூரி என்ஐஆர்எஃப் தரவரிசையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தன்னாட்சி அதிகாரம் பெற்று இருக்கிறதா? NAAC, National Board of Accreditation அங்கீகாரம் இருக்கிறதா? என்றும் சோதிக்க வேண்டும். Centre of Excellence, Advanced Learning Center ஆகியவை பற்றியும் காண வேண்டும். மிக முக்கியமாக வேலைவாய்ப்பு எப்படி என்று பார்க்க வேண்டும். என்ன மாதிரியான நிறுவனங்கள்,எவ்வளவு ஊதியத்தில் வேலை, மாணவர்களின் சராசரி, அதிகபட்ச, குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் சம்பந்தப்பட்ட கல்லூரி வலைதளத்தில் மட்டுமல்லாது, நேரிலும் சென்றுப் பார்க்க வேண்டும்.


பொறியியலோ, மருத்துவமோ, கலை, அறிவியல் படிப்புகளோ எந்தப் படிப்புக்கு அதிக வேலைவாய்ப்பு?


குறிப்பிட்ட படிப்பு என்றில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் எந்தக் கல்லூரியில் படிக்கிறோம்? நாம் எப்படி கற்கிறோம்? எவற்றையெல்லாம் கூடுதலாகப் படிக்கிறோம் என்பதில்தான் வேலைவாய்ப்புகள் அடங்கி இருக்கின்றன.


இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.