அரசு குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் இருந்து  8 பெண்கள் உட்பட 19 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தலைமைச் செயலரும், பயிற்சி மையத் தலைவருமான  இறையன்பு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தைச்‌ சேர்ந்த இளநிலைப்‌ பட்டதாரிகள்‌, முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின்‌ சார்பில்‌ சென்னையில் உள்ள அகில இந்தியக்‌ குடிமைப்‌ பணித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையத்திலும்‌, கோயம்புத்தூர்‌, மதுரை மாவட்டங்களில்‌ உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும்‌ மத்திய தேர்வாணையம்‌ நடத்தும்‌ குடிமைப் பணி முதல் நிலைத்‌ தேர்வுக்கு கட்டணமில்லாப்‌ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்தக் குடிமைப் பணி பயிற்சிக்கு  முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி பெற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் இந்த நுழைவுத் தேர்வை நடத்தி, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.


கடந்த 2000 முதல் 2020 வரை 20 ஆண்டுகளில் 747 தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். 


இந்த நிலையில் அரசு குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் இருந்து  8 பெண்கள் உட்பட 19 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தலைமைச் செயலரும், பயிற்சி மையத் தலைவருமான  இறையன்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


’’குடிமைப் பணித் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு, தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி நேர்முகத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


கடந்த 2022-ம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதன்மை தேர்வுக்கு தமிழக அரசின் மையத்தில் இருந்து முழு நேரமாக 76 பேர் பயிற்சி பெற்றனர். ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலர் நிலையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், பேராசிரியர்கள், உளவியல் நிபுணர்கள் போன்ற வல்லுநர்களைக் கொண்டு மாதிரி ஆளுமைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.


இதில் 46 பேர் முனைப்புடன் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து டெல்லியில் ஆளுமைத் தேர்வு  நடைபெற்றது. இதில், தமிழக அரசின் பயிற்சி மையத்தில் இருந்து 19 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர்’’.


இவ்வாறு  தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.


கூடுதல் விவரங்களை https://www.civilservicecoaching.com/ என்ற இணையதளத்திலும்‌, தொலைபேசி எண்‌ 044 -24621475, அலைபேசி எண்- 94442 86657 ஆகிய எண்களையும்‌ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்‌.