தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் சார்பில் குடிமைப் பணிகளில் சேர 2023 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி பெற நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. 


தமிழகத்தைச்‌ சேர்ந்த இளநிலைப்‌ பட்டதாரிகள்‌, முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின்‌ சார்பில்‌ சென்னையில் உள்ள அகில இந்தியக்‌ குடிமைப்‌ பணித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையத்திலும்‌, கோயம்புத்தூர்‌, மதுரை மாவட்டங்களில்‌ உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும்‌ மத்திய தேர்வாணையம்‌ நடத்தும்‌ குடிமைப் பணி முதல் நிலைத்‌ தேர்வுக்கு கட்டணமில்லாப்‌ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


விண்ணப்பதாரர்களிடம் இருந்து இந்தப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்விற்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டு, 7077 விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டன. 2023 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ 28 ஆம்‌ நாள்‌ நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம்‌ நடத்தும்‌ முதல்நிலைத்‌ தேர்வுக்கு கட்டணமில்லாப்‌ பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்‌ தேர்வு, தமிழ்நாட்டில்‌ உள்ள 17 மையங்களில்‌ வரும்‌ 13.11.2022 (ஞாயிற்றுக்‌ கிழமை) அன்று நடைபெற உள்ளது.


நுழைவுத்‌ தேர்வுக்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டினை பயிற்சி மைய இணையதளத்தின்‌ https://www.civilservicecoaching.com வாயிலாகப் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. 


தேர்வு எப்போது?


தேர்வு 13.11.2022 அன்று ( ஞாயிற்றுக்‌ கிழமை ) காலை 10.30 மணி முதல்‌ 1.00 மணி வரை இரண்டரை மணி நேரம்‌ நடைபெறும்‌. இந்தத் தேர்வில்‌ 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும்‌. 


பெறப்பட்ட விண்ணப்பங்களின்‌ அடிப்படையில்‌, தேர்வு மையங்கள்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளன. 


மேலும்‌, அவ்வப்போது அறிவிக்கப்படும்‌ விவரங்களை https://www.civilservicecoaching.com/ என்ற இணையதளத்திலும்‌, தொலைபேசி எண்‌ 044 -24621475, அலைபேசி எண்- 94442 86657 ஆகிய எண்களையும்‌ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்‌.


இந்தத் தகவல்களை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையப் பயிற்சித்‌ துறைத்‌ தலைவர்‌ தெரிவித்துள்ளார்.




ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?


* மாணவர்கள் https://aicscc.com/Student/index என்ற இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 


* அதில் தங்களின் மொபைல் எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். 


* அதில், தோன்றும் பக்கத்தை க்ளிக் செய்து, மாணவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதையும் வாசிக்கலாம்: மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை https://tamil.abplive.com/news/tamil-nadu/cancellation-of-accreditation-for-medical-colleges-if-extra-fees-are-charged-tn-govt-84106/amp