யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகள் (CSE) மற்றும் இந்திய அயலகத் துறை தேர்வுகளுக்கு (IFS) விண்ணப்பிக்கும்போது ஒரு முறை விண்ணப்பப் பதிவில் (OTR) முக்கிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
அதாவது, ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் ஒரு முறை விண்ணப்பப் பதிவில் ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்னும் முக்கிய விதிமுறையை யூபிஎஸ்சி கொண்டு வந்துள்ளது.
முக்கியத் தேதிகள் என்ன?
ஆண்டுதோறும் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகள் (CSE) மற்றும் இந்திய அயலகத் துறை தேர்வுகளுக்கு (IFS) பிப்ரவரி 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பிப்.12 முதல் 18ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
இந்த நிலையில், ஒரு முறை விண்ணப்பப் பதிவில் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும். தேர்வர் தனது OTR சுயவிவரத்தில் (முன்பதிவு) தனது (i) பெயர்/ மாற்றப்பட்ட பெயர், (ii) பிறந்த தேதி, (iii) பாலினம், (iv) தந்தை/ தாய்/ பாதுகாவலர் பெயர், (v) சிறுபான்மை நிலை மற்றும் (vi) 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுப் பட்டியல் எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றத்தைச் செய்ய விரும்பினால், OTR தளத்தில் பதிவுசெய்த பிறகு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அனுமதி
OTR சுயவிவர (பதிவு) தரவில் இந்த மாற்றங்கள் ஆணையத்தின் எந்தவொரு தேர்வுக்கும் அவரது இறுதி விண்ணப்பத்திற்கான விண்ணப்பப் பதிவு முடிந்த அடுத்த நாளில் இருந்து 7 நாட்கள் காலாவதியாகும் வரை செய்யப்படலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வும் வனத்துறை முதல்நிலைத் தேர்வும் மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.