பூஜா கேத்கர் உள்ளிட்ட சிலர் ஆள் மாறாட்டம், தகவல்களில் மோசடி செய்து யுபிஎஸ்சி அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகப் பரவிய நிலையில், தேர்வு மையங்களில் ஏஐ லைவ் வசதியுடன் கூடிய சிசிடிவி பாதுகாப்பு வழங்குவதற்காக நிறுவனங்களிடம் யுபிஎஸ்சி ஏலம் கோரியுள்ளது.
நாடு முழுவதும் நீட், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள் உள்ளிட்டவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளில் மோசடி நடைபெற்ற விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மோசடி
அதேபோல பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் தன்னுடைய பெற்றோரின் பெயரை மாற்றி, மோசடியில் ஈடுபட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன்னுடைய கண் பார்வையில் குறைபாடு, உளவியல் குறைபாடு என்றெல்லாம் குறிப்பிட்டு, தன்னுடைய அடையாளத்தில் மோசடியை உருவாக்கினார்.
ஓபிசி பிரிவிலும் அவர் மோசடி செய்ததாகக் கூறப்படும் நிலையில், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. தொடர்ந்து அவரின் தேர்வை ரத்து செய்யவும் யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பியது.
ஏஐ லைவ் வசதியுடன் கூடிய சிசிடிவி பாதுகாப்பு
இந்த நிலையில், பயிற்சி பெற்ற பொதுத் துறை நிறுவனங்களிடம் தேர்வு மையங்களில் ஏஐ லைவ் வசதியுடன் கூடிய சிசிடிவி பாதுகாப்பு, ஆதாரை அடிப்படையாகக் கொண்ட கைரேகை பாதுகாப்பு அல்லது டிஜிட்டல் கைரேகை வழங்கல், தேர்வர்களின் முக அடையாளம், மின்னணு அனுமதிச் சீட்டு க்யூஆர் கோடு ஸ்கேனிங் ஆகியவற்றை வழங்குவதற்காக நிறுவனங்களிடம் யுபிஎஸ்சி ஏலம் கோரியுள்ளது.
சிபிபி தளம் (CPP portal) மூலமாக தேவையான ஏல ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஜூலை 29ஆம் தேதி வரை விருப்பமுள்ள நிறுவனங்கள் ஏல ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த ஏலம் ஜூலை 30ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. ஏலத்தில் தேர்வாகும் நிறுவனங்கள், 3 ஆண்டுகளுக்கு இணைந்து செயல்பட முடியும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மாபெரும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் முறைகேடு
இதற்கிடையே நாடு முழுவதும் மே 5ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இத்தனை மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்தது.
இதற்கிடையே பிஹார், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் நீட் முறைகேடு நடந்ததாகவும் ஆள் மாறாட்டம், வினாத்தாள் முன்கூட்டியே கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. விசாரணையில் சில உறுதியும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு: https://upsc.gov.in/content/date-corrigendum-respect-nit-aadhaar-based-biometric-authentication-else-fingerprint-0 என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.