யூபிஎஸ்சி ஐஎஃப்எஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து செந்தில்குமார் 26ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


இந்திய நிர்வாகத் துறை, இந்திய காவல் துறை, இந்திய வனத் துறை என்று அழைக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான காலி இடங்கள், யூபிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வுகளை நடத்துகிறது. 


இந்தத் தேர்வுகள் அனைத்தும் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். 3ஆவது தேர்வில் தோல்வி அடைந்தாலும் முதலில் இருந்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.  அந்த வகையில் 150 வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஐஎஃப்எஸ் தேர்வுக்கான அறிவிப்பை 2022-ம் ஆண்டு யூபிஎஸ்சி வெளியிட்டது. 


அக்டோபரில் முதல்நிலைத் தேர்வு


இந்த நிலையில், ஐஎஃப்எஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. அதில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கான முதன்மைத் தேர்வு நவம்பர் 20 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1400 மதிப்பெண்களுக்கு 6 தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து நேர்முகத் தேர்வு டெல்லியில் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து இறுதித் தேர்வு முடிவுகளை யூபிஎஸ்சி வெளியிட்டது.


147 பேர் தேர்வு


இதில் மொத்தம் 147 பேர் வெவ்வேறு பிரிவில், வன அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொதுப் பிரிவில் 39 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 21 பேர், ஓபிசி பிரிவில் 54 பேர், எஸ்சி பிரிவில் 22 பேர், எஸ்டி பிரிவில் 11 பேர் என மொத்தம் 147 தேர்வர்கள் இந்திய வனத் துறைக்குத் தேர்வு எய்யப்படுள்ளனர். இவர்களின் பெயர், பதிவெண் அடங்கிய பட்டியலை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 


அகில இந்திய அளவில் கொல்லுரு வெங்கட ஸ்ரீகாந்த் என்னும் தேர்வர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சாஹில் போஸ்வால் அகில இந்திய அளவில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அனுராதா மிஸ்ரா அபிஜித் 3ஆவது இடத்தையும், லோஹியா அனுஷ்கா அபிஜித் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல அஜய் குப்தா என்னும் மாணவர் 5ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.


செந்தில் குமார் முதலிடம் 


தமிழக அளவில் செந்தில் குமார் என்னும் தேர்வர் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 26ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். வைசாலி என்னும் பட்டதாரி, இரண்டாவது இடத்தையும் தேசிய அளவில் 37ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


யூபிஎஸ்சி வெளியிட்டுள்ள பட்டியலைக் காண https://www.upsc.gov.in/sites/default/files/FR-IFSM-22-engl-010723.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.