யூபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வு (ஐஏஎஸ் தேர்வு) முடிவுகள் வந்துள்ளன. இதில் தமிழகத்துக்குப் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பொதுவெளியில் பதிவேற்றப்பட்ட 685 பேர் கொண்ட தேர்ச்சிப் பட்டியலைப் பார்க்கும்போது, தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கைத் தாண்டவில்லை என்று தோன்றுகிறது. குடிமைப் பணித் தேர்வு வரலாற்றில் தமிழகத்தின் மிக மோசமான செயல்பாடு இது.
தேர்ச்சிப் பட்டியலில் 42வது 'ரேங்க்' - தமிழகம் பெற்ற மிக உயரிய இடம்! அதிகபட்சமாக இரண்டு பேருக்கு ஐஏஎஸ் கிட்டலாம். மற்றபடி பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை.
குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தின் பங்களிப்பு பொதுவாக மிகச் சிறந்ததாக இருக்கும். ஓரிரு ஆண்டுகளாக நமது செயல்பாடு சரிந்து வருகிறது. இந்த ஆண்டு 'வரலாறு காணாத' வீழ்ச்சி. ஏமாற்றம், அதிர்ச்சி, வேதனை!
தேர்ச்சி சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்; ஏற்ற இறக்கம் இருக்கும். கடுமையான போட்டியில் இது இயல்பானது. ஆனால் இம்முறை தமிழகம் கண்டுள்ள சரிவு நிச்சயம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது. தேர்வில், தேர்ச்சி முறையில் எந்தத் தவறும் நிகழ்ந்து விடவில்லை. இந்தத் தளர்வுக்கு நாமேதான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக இளைஞர்கள் மத்தியில், தேர்வுகளுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது மிக முக்கிய காரணம்.
சர்வதேச அளவில் போட்டிகளில் சாதித்துப் புகழ் பெற்ற தமிழக இளைஞர்களை, மேலும் திறன் வாய்ந்தவர்களாய் மாற்றுகிற முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. மாறாக, போட்டிக் களத்தில் இருந்து அவர்களைப் பின்னுக்கு இழுத்து, நேர் எதிர்த் திசையில் பயணிக்கத் தூண்டியது, சரியான செயல் அன்று.
ஒரு குறிப்பிட்ட தேர்வு, தேவை அல்லது தேவையில்லை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கலாம்; அதற்கான, நியாயமான காரணங்கள் இருக்கலாம். கொள்கை ரீதியாகவும் வலுவான வாதங்கள் இருக்கலாம். ஆனால் தேர்வுக்கு எதிரான பிரச்சாரம், இளைஞர்கள் மத்தியில், போட்டிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி விடக்கூடாது. இது விஷயத்தில் நாம் இன்னமும் கவனமாய், எச்சரிக்கையுடன் நடந்து இருக்கலாம்.
தவறான வழிகாட்டுதல்
போட்டித் தேர்வுகளின் தயாரிப்பில் தரப்படுகிற தவறான வழிகாட்டுதல், மற்றொரு காரணி. தேர்வுக்கான பாடத்திட்டம், சரியான புத்தகங்கள், தெளிவான விளக்கங்கள், ஆழமான புரிதல்கள்... தரப்படுவது இல்லை. மாறாக, தனிநபரின் தேர்ச்சியை உலகமகா சாதனையாக்கி வெற்றுத் தன்னம்பிக்கைப் பேச்சால், இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் பணியே அமோகமாக நடைபெறுகிறது.
'உலகம் உனது கையிலே; வானம் உனது பையிலே' என்று சினிமாத் தனமாக சொல்லித் தரப்படுகிறது. வெற்று முழக்கங்களால் எப்போதும் ஒருவித மயக்கத்திலேயே இளைஞர்கள் 'வழி நடத்தப்படுகிறார்கள்'! விளைவு..? தெளிந்த பார்வை, தீர்க்கமான பயணம், நிறைவான வெற்றி... கிட்டாமலே போகிறது.
சென்னைக்கு மிக நெருங்கிய திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு பயிலரங்கம் மூலம் எனக்கு அறிமுகமான. ஓர் இளைஞர். தனது வீட்டில் படிப்பறை முழுவதும் தன்னம்பிக்கை நூல்களாக நிரப்பி வைத்திருந்தார். அநேகமாக ஒவ்வொன்றையும் வரிக்கு வரி ஒப்பிப்பார். பத்துக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை எழுதி இருக்கிறார்; ஒன்றில் கூட தேர்ச்சி பெறவில்லை. தன்னம்பிக்கை நூல்களைப் படிக்க செலவிட்ட நேரத்தைப் பொது அறிவுப் புத்தகங்களில் செலுத்தியிருந்தால், இந்நேரம் ஒரு வெற்றியாளராக இருந்திருப்பார். தமிழகத்தில் பல்லாயிரம் இளைஞர்கள் இப்படித்தான்...
வறட்டுத் தன்னம்பிக்கையில் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்
தேர்ச்சிக்கான தெளிவான வழிமுறை தெரியாது, வறட்டுத் தன்னம்பிக்கையில் தமது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு வெளியே பல மாநிலங்களில் இளைஞர்களின் மனநிலை, அணுகுமுறை, செயல்முறை முழுவதுமாக மாறிவிட்டது; அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், 'தொழில்முறை அணுகுமுறை' (professional approach) தெளிவாகத் தெரிகிறது.
கல்வி, தேர்வு மூலம் மட்டுமே தாமும் தமது மாநிலமும் உயர முடியும் என்பதை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். தமது கனவுகளுக்கு ஏற்ப, கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்; உழைக்கிறார்கள்.
தமிழக இளைஞர்களிடையே ஒருவித மெத்தனம் ஆழமாகப் பதிந்து விட்டதோ? என்று கருதத் தோன்றுகிறது. நன்கு வளர்ந்த மாநிலங்களில், எல்லா மட்டங்களிலும் ஓரளவுக்கு சுயசார்பு எட்டிவிட்ட நிலையில், மெத்தனம் தலை தூக்கவே செய்யும். இதிலிருந்து இளைஞர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். இது ஒன்றும் கடினமான காரியம் அல்ல; ஆனால் உடனடியாகச் செய்ய வேண்டிய காரியம்.
குடிமைப் பணித் தேர்வில் பின்னடைவு, மிக எளிதில் கடந்து போகக் கூடிய, மிகச் சாதாரண நிகழ்வாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் மிகவும் மகிழ்ச்சிதான். ஆனாலும் நாம் குறிப்பிட்ட காரணங்கள் மறைந்து போய்விடாது.
விழிப்புடன் உயிர்ப்புடன் வருங்காலத்தை எதிர்கொள்கிற பக்குவம் துளிர்க்கட்டும். அனைவருக்கும் நல்லது.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி- கட்டுரையாளர், போட்டித்தேர்வு பயிற்சியாளர்